திரைக்கதை 24






ஸிட் ஃபீல்டின்    புத்தகத்தின்     
பதினோராவது     அத்தியாயமான    
‘The Sequence’    என்பதை    மொத்தம்    
மூன்று    கட்டுரைகளில்    சென்ற     
கட்டுரையோடு      முடித்தோம்.     
இனி,    பனிரண்டாவது     அத்தியாயத்தை    
இங்கே     துவங்குவோம்.





            Chapter 12 – Building the Storyline





திரைக்கதை     என்பதை,     
ஒன்றுக்கொன்று     தொடர்புடைய     
சம்பவங்கள்    மற்றும்    நிகழ்ச்சிகள்     
ஆகியவை,     க்ளைமாக்ஸை     நோக்கி     
நம்மை     அழைத்துச்செல்லும்     
வரிசையான     கோர்வை     
என்பதாக     எடுத்துக்கொண்டால்,    
நமது     மண்டைக்குள்     
சுற்றிக்கொண்டிருக்கும்     சிறுசிறு    
சம்பவங்கள்,    வசனங்கள்,     
காட்சிகள்     
ஆகியவற்றையெல்லாம்     
ஒன்றுசேர்த்து      கோர்வையான     
ஒரு     கதையை    எப்படி      
தயார்     செய்வது?






சுருக்கமாக    சொன்னால்,     
நமது    மனதில்    இருக்கும்    கதையை     
எப்படி    முழுதாக     உருவாக்குவது?





சரி.     முதலிலிருந்து    ஒருமுறை     
என்ன     செய்வது     என்பதைப்     
பார்க்கலாம்     என்கிறார்     
ஸிட் ஃபீல்ட்.       
திரைக்கதை      
அமைப்பை      எடுத்துக்கொண்டால்,     
இதுவரை     நான்கு     முக்கியமான     
அம்சங்களை    நாம்     
விரிவாகப்      பார்த்திருக்கிறோம். 



அவையாவன:


1. முடிவு

2. ஆரம்பம்

3. முதல் Plot Point

4. இரண்டாவது Plot Point.


இதோ    ஆரம்ப     அத்தியாயங்களில்     
நாம்    பார்த்த    திரைக்கதை     
அமைப்பின்     வரைபடம்.     
இதை      ஒருமுறை      
பார்த்துக்கொள்ளுங்கள்.








இங்கே   Setup  –  அறிமுகம்.     
Confrontation  –  எதிர்கொள்ளல்.    
Resolution  –  முடிவு.




அறிமுகம்    ( அல்லது )    ஆரம்பம்     
என்பது,     படத்தின்     முதல்     அறிமுகக்     
காட்சியில்    ஆரம்பித்து,     
முதல்   Plot Point     வரை    செல்லக்கூடிய    
பகுதி.      இந்த    முதல்    Plot Pointல்     
இருந்து     இரண்டாவது     Plot Point     
வரை    செல்லும்    பகுதியே,      
திரைக்கதை      அமைப்பின்     
இரண்டாவது     பகுதியான     
‘எதிர்கொள்ளல்’.      இதேபோல்     
இரண்டாவது     Plot Pointல்     
ஆரம்பித்து     படத்தின்     
முடிவு     வரை    இருக்கக்கூடிய     
பகுதி,     மூன்றாவது    பகுதி.     
இதன்பெயர்    ‘முடிவு’.








இந்த    ஒவ்வொரு    பகுதியும்,     
அதன்    பிரதான     அம்சத்துக்கான     
(  ஆரம்பம்    அல்லது    எதிர்கொள்ளல்     
அல்லது    முடிவு )      
குறிக்கோளுடன்     விளங்குகிறது.    
அதாவது,     ஆரம்பப்    பகுதி    என்பது,     
படத்தின்     கதாபாத்திரங்களின்     
அறிமுகம்.     எதிர்கொள்ளல்    என்பது,     
இந்தக்    கதாபாத்திரங்கள்    சந்திக்கும்     
சிக்கல்.    முடிவு    என்பது,     
இந்த   சிக்கலில்    இருந்து     
கதாபாத்திரங்கள்     விடுபடுவது.     
முதல்    பகுதியில்     என்னதான்     
காட்சிகள்     
எழுதப்பட்டிருந்தாலும்,     ‘அறிமுகம்’     
என்பதே    அதன்    பிரதான     
குறிக்கோள்.       இதுபோல்தான்     
பிற    இரண்டு    பகுதிகளும்.     
இப்போது     திரைக்கதை    அமைப்பின்     
முதல்    பகுதியை     
எடுத்துக்கொள்வோம்.








திரைக்கதையின்    முதல்    பக்கத்தில்    
இருந்து    அதன்    முதல்   Plot Point     
வரை    இருக்கக்கூடிய    பகுதி    இது.     
திரைக்கதை    அமைப்பின்    மூன்று     
பகுதிகளில்     ஒன்றாக     இருந்தாலும்,    
இந்த   Set-upக்கே    ஒரு    ஆரம்பம்,    
இடைப்பகுதி    மற்றும்    முடிவுப்பகுதி     
என்பன     இருக்கின்றன     அல்லவா?     
இருபதில்    இருந்து    இருபத்தைந்து     
பக்கங்கள்     இருக்கக்கூடிய     
இந்தப்    பகுதி,     திரைக்கதையின்    
ஆரம்பத்தில்    துவங்கி,     
முதல்   Plot Point    என்பதில்    முடிகிறது.     
இந்த   Plot Point   என்பது,    
கதையில்    ஒரு     திருப்பத்தை    
விளைவிக்கும்    சிறு    பகுதி.








பொதுவாக    ஒரு    திரைக்கதையில்,     
இந்த     முதல்   Plot Pointடில்   தான்     
கதையின்     
நோக்கம்   –   அதுவரை     
அறிமுகப்படுத்தப்பட்ட     
கதாபாத்திரங்களின்    நோக்கம்    என்ன     
என்பது     தெரியும்.     
கலவரத்தில்    ராணி  முகர்ஜி     
கொல்லப்படுவது     ஹேராமின்     
முதல்    Plot Point.     
அதனால்தான்     தனது    இயல்பு     
வாழ்விலிருந்து     வெடித்து    வெளியே     
வந்து    விழும்    சாகேத்ராமுக்கு     
காந்தியைக்     கொல்லவேண்டும்     
என்ற     வெறி    அப்யங்கரால்     
பின்னால்     
போதிக்கப்படுவதால்.







பொதுவாக,     இந்த     முதல்     
Plot Point,      திரைக்கதையின்     
இரண்டாவது     பகுதியான      
Confrontation    ( எதிர்கொள்ளல் )     
என்பதை    நோக்கியே    கதையில்     
திருப்பத்தை     விளைவிக்கிறது.     
அதாவது,     கதாபாத்திரங்களின்     
குறிக்கோள்,     முதல்    Plot Pointடின்     
மூலமாக       தெரிவிக்கப்பட்டவுடன்,    
அந்தக்    குறிக்கோளை    நிறைவேற்ற     
இந்தக்     கதாபாத்திரங்கள்      
செயல்படுகையில்     
எதிர்கொள்ளும்     சிக்கல்களே     
திரைக்கதை     அமைப்பின்    
இரண்டாவது     பகுதியான     
‘எதிர்கொள்ளல்’.     
கதாபாத்திரத்தின்    
குறிக்கோள்     தெரிந்துவிட்டால்,     
அதை    நிறைவேற்றுவதில்    சிக்கல்களை    
நாம்    உருவாக்க    முடியும்.    
உருவாக்க      வேண்டும். 











அப்போதுதான்     திரைக்கதை     
சுவாரஸ்யமாக    இருக்கும்.     
இந்த    இரண்டாவது    பகுதி,     
கிட்டத்தட்ட     அறுபது    பக்கங்கள்    
இருக்கக்கூடும்.     
இந்த      அறுபது     பக்கங்களின்    
இறுதியில்     நடப்பதே     இரண்டாவது    
Plot Point.       இந்த      இரண்டாவது     
பகுதி    முடியும்    இடம்.     
கலவரத்தில்      மூளைச்சலவை     
செய்யப்பட     சாகேத்ராம்,     
அவனது     குறிக்கோளான      
காந்தியைக்     கொல்லவேண்டும்    
என்பதற்காக     எப்படித்     தயாராகிறான்?     
அவனது    வாழ்வில்     இந்த    சமயத்தில்    
நடக்கும்    சம்பவங்கள்    என்னென்ன?     
இந்த      இரண்டாவது    பகுதி    முடிவது,    
தனது    நண்பனின்    மரணத்தை     
சாகேத்ராம்    சந்திப்பதில்    ( Plot Point 2 ).     
இதுதான்     கிளைமேக்ஸை    நோக்கி    
இந்தப்     படத்தின்    கதையைத்     
திருப்புகிறது      அல்லவா?     
இரண்டாம்     Plot Pointடின்     
மூலமாக     கிளைமேக்ஸை     
நோக்கித்     திருப்பப்படும்    கதை,     
எவ்வாறு     முடிகிறது    என்பது     
திரைக்கதை     அமைப்பின்     
மூன்றாவது    பகுதி.     
Resolution     ( ‘முடிவு’ ).   சுபம்.    The End.







திரைக்கதை     அமைப்பின்    இந்த     
ஒவ்வொரு     பகுதியிலும்,     
அந்தப்     பகுதியின்     ஆரம்பத்தில்     
தொடங்கி,     அந்தப்    பகுதியின்    முடிவில்     
உள்ள    Plot Point   வரை    கதையை    
நகர்த்த     வேண்டும்.      
அப்படியென்றால்,     
இந்த     ஒவ்வொரு    பகுதியிலும்,     
அந்தப்     பகுதியின்     துவக்கத்தில்     
இருந்து    முடிவில்    உள்ள     Plot Point    
வரை    ஒரு    கோட்டைக்    கிழித்ததுபோன்ற    
ஒரு    direction     இருக்கிறது     அல்லவா?      
ஒவ்வொரு    பகுதியிலும்    உள்ள    
Plot Pointகளை     நோக்கியே    நாம்     
கதையை      செலுத்துவதால்,     
இந்த     இரண்டு     Plot Pointகளும்     
இரண்டு     கலங்கரை     
விளக்கங்களைப்     போன்றவை.     
இருட்டில்    திசை     
தெரியாமல்     
தடுமாறிக்கொண்டிருக்கும்     
கப்பல்களை,     மிகத்தொலைவில்    
தெரியும்     கலங்கரை     விளக்கத்தின்    
ஒளி,     கரையை     நோக்கி     இழுக்கிறது.    
இந்த      முதல்    கலங்கரை     
விளக்கத்தை     அடைந்தபின்னர்    
நமது     பயணத்தின்     குறிக்கோள்     
நமக்குப்     புரிகிறது.     
அதன்பின்     அங்கிருந்து     
மிகத்தொலைவில்     தெரியும்     
அடுத்த     கலங்கரை     விளக்கத்தை     
நோக்கி,     வழியில்     இருக்கும்     
பாறைகளுக்கு     இடையில்    நமது    
கப்பல்     பயணிக்க      ஆரம்பிக்கிறது.     
இந்த      இரண்டாவது    கலங்கரை     
விளக்கத்தை     அடைந்தபின்னர்,     
அங்கிருந்து     சற்றுத்தொலைவில்     
தெரியும்     இடம்  –  நாம்   சேர   விரும்பும்    
தீவு  –  நம்    கண்களுக்குத்    
தெரிகிறது.      
அதன்பின்     பயணம்     
இனிதே      முடிகிறது.







சரி.     இப்போது,      திரைக்கதை     
அமைப்பைப்    பற்றியும்,     
அதன்     மூன்று     பகுதிகளைப்    
பற்றியும்    ஒருமுறை    நமது    பாடத்தை    
revise    செய்தாயிற்று.    இனி,     
இந்த     மூன்று     பகுதிகளையும்    
எப்படி      உருவாக்கப்     
போகிறோம்?




இதற்கு    ஸிட் ஃபீல்ட்     சொல்லும்     
வழி -  3X5   கார்டுகளை    வைத்து.




இதோ     இந்தப்     படத்தில்     இருப்பவையே     
இந்த கார்டுகள்.    
 3X5   என்ற     அளவில்      
அமைந்திருக்கும்     காலியான     
வேற்று     கார்டுகள்     இவை. 





‘இதெல்லாம்     எதற்கு?     என்னமோ     
சீட்டாட்டம்     போல     இருக்கிறதே?’     
போன்ற      கேள்விகளை    கொஞ்ச     
நேரம்     கழித்து      எழுப்பிக்கொள்ளலாம்.     
முதலில்     ஸிட் ஃபீல்ட்    என்ன     
சொல்லவருகிறார்     
என்பதைப்     பார்த்துவிடலாம்.     
அதன்பின்     எப்படி     அதனை    செய்யலாம்     
என்று       யோசிப்போம்.


இதோ    ஸிட் ஃபீல்ட்     சொல்லும்      
வழிமுறை.



1.   சிறிய     கார்டுகள்     
சிலவற்றை      எடுத்துக்கொள்ளவும்.


2.   நமது     மனதில்     இருக்கும்     
அத்தனை     ஸீன்களையும்      
ஒவ்வொன்றாக      இந்தக்     
கார்டுகளில்      எழுதிக்கொள்ளவும்.     
ஒவ்வொரு     கார்டுக்கும்    ஒரு    ஸீன்.     
பக்கம்    பக்கமாக       எழுதாமல்,     
அந்த     ஸீனின்    ஓரிரு     வரி    விளக்கத்தை     
மட்டும்     எழுதவேண்டும்.



3.    இப்படி     எத்தனை     ஸீன்களை    
எழுதவேண்டும்     என்பதற்கும்    அவரிடம்     
ஒரு     வரையறை     இருக்கிறது.    
திரைக்கதையின்     ஒவ்வொரு     
முப்பது      பக்கத்துக்கும்     பதினான்கு      
ஸீன்கள்.     
அதாவது     பதினான்கு     கார்டுகள்.




4.     அது    ஏன்    பதினான்கு?     
ஏன்     பதிமூன்றாகவோ     
பதினைந்தாகவோ      இருக்கக்கூடாது?     
இதற்கு     ஸிட் ஃபீல்ட்     சொல்லும்     
காரணம்:        பதினான்கு    என்பது     
அவரது      அனுபவத்தில்      இருந்து      
பெறப்பட்ட      எண்ணிக்கை.     
ஒவ்வொரு     முப்பது     பக்கத்துக்கும்     
பதினான்கு      ஸீன்கள்      இருந்தால்,     
திரைக்கதை     சுவாரஸ்யமாக       
செல்வதற்கு       வாய்ப்புகள்      அதிகம்.     
ஒருவேளை     இதற்குக்     கீழே      
எண்ணிக்கை       இருந்தால்,     
திரைக்கதை     மெதுவாக     செல்ல      
வாய்ப்பு      உண்டு.        அதேபோல்     இதற்கு     
மேலே     எண்ணிக்கை      இருந்தால்     
சொல்லவந்த      விஷயத்தை      
சொல்வதில்    பல     
சுவாரஸ்யங்கள்      விட்டுப்போய்,     
திரைக்கதை      ஒன்றுமே     
புரியாத      சம்பவங்களின்      
கோர்வையாக       இருக்க     
வாய்ப்புகள்     அதிகம்.




ஸீன்களை    ஏன்    சிறிய     
கார்டுகளில்      எழுதிக்கொள்ளவேண்டும்?    
ஏன்      பேப்பரிலோ     அல்லது     
கணினியிலோ       எழுதிக்கொள்ளக்கூடாது?




காரணம்    எளிது.     
கைக்கு     அடக்கமான      கார்டுகளில்,     
ஒவ்வொரு     கார்டிலும்     ஒரு     ஸீனின்     
சுருக்கம்      எழுதப்பட்டால்,      
அந்த    வரிசையை     
இஷ்டத்துக்கு     மாற்றியமைத்து    
எப்படி    வேண்டுமானாலும்    இந்த     
ஸீன்களின்     வரிசையைத்     
தீர்மானிக்கமுடியும்.     
பேப்பரில்     எழுதினால்     அடித்துத்     
திருத்தி    எழுதவேண்டி     இருக்கும்.     
கூடவே     கார்டுகளில்    இந்த     வரிசை     
இருந்தால்     அவற்றை     
எங்குவேண்டுமானாலும்    
எளிதில்     எடுத்துச்    
செல்லலாம்.      
மாற்றியமைக்கலாம்.







சரி.     இப்போது    ஒரு    உதாரணம்.     
ஏதாவது     ஒரு    படத்தை      
எடுத்துக்கொள்ளலாம்.     
இப்படி     சுருக்கமாக      அவற்றை     
எழுதிப்      பார்க்கலாம்.      
ஆரண்யகாண்டம்     படத்தை      
உதாரணமாகக்       கொள்ளுவோம்.     
இதோ    முதல்    முப்பது     
பக்கங்களின்      சுருக்கமான      
ஸீன்    வரிசை.      (  ஒவ்வொரு     
முப்பது     பக்கங்களுக்கும்     
பதினான்கு    ஸீன்கள்     
இருக்கவேண்டும்    என்பதை     
வைத்து     எழுதிப்     பார்க்கலாம் ).




1.  அறிமுகம்.   சிங்கப்பெருமாள்  &  சுப்பு.


2.    தான்    கடத்திவந்த    சுப்புவுடன்     
உறவு     கொள்ள      
முயற்சிக்கிறார்     
சிங்கப்பெருமாள்.     
முடியவில்லை.


3.   சிங்கப்பெருமாளின்    கும்பல்   அறிமுகம்.


4.    பசுபதியின்    அறிமுகம்.     
சிங்கப்பெருமாளிடம்    பசுபதி    
பேசுவது.


5.   பசுபதிக்குக்    கஞ்சா    பற்றி     
தகவல்    கிடைப்பது.     
அதை      சிங்கப்பெருமாளிடம்     
சொல்வது.


6.   கஞ்சாவை    கடத்த    விருப்பம்     
தெரிவிக்கும்    பசுபதியை     
சிங்கப்பெருமாள்    மறுப்பது.


7.   ‘நீங்க   என்ன    டொக்காயிட்டீங்களா?’


8.    சிங்கப்பெருமாள்     முதலில்     
கஞ்சாவை    கடத்தி   வா     
என்று     சொல்வது.


9.   சப்பை    அறிமுகம்.


10.    சிங்கப்பெருமாளின்    
கும்பலின்     ஆண்ட்டிகளை     
கரெக்ட்     செய்வது    குறித்தான     
பேச்சு    (  இது    வெட்டி    ஸீன்    இல்லை.    
இதற்கான     காரணம்    Plot Point 1ல்    
தெரியும்  ).


11.    பசுபதியும்    கும்பலும்    
காரில்    கிளம்புவது.     கஞ்சாவை    வாங்க.


12.   காரில்    மறுபடியும்     ஆண்ட்டிகளைப்     
பற்றிய    பேச்சு.


13.    கும்பலில்     ஒருவனுக்கு      
ஃபோன்    வருதல்.    அதனை     
லௌட்ஸ்பீக்கரில்    போடுதல்.


14.   ‘பசுபதிய     கொன்னுரு’   ( Plot Point 1 ).


இப்படி    ஒரு    வரிசை    கிடைக்கிறது.    
(  இந்த    வரிசையில்    ஓரிரண்டு     
மாற்றங்கள்     இருக்கக்கூடும்.    
இரண்டு      வருடங்களுக்கு     
முன்னர்    திரையரங்கில்     பார்த்த    
நினைவில்    எழுதியது  ).     
இந்த    லிஸ்ட்,    முதல்    முப்பது     
பக்கங்களில்     நடக்கவேண்டிய     
சம்பவங்களைப்    பற்றிய     
ஒரு    வரிசை.     அவ்வளவே.    
திரைக்கதை     எழுதத்     துவங்குமுன்னர்     
நமது     மூளையில்    இருக்கும்      
ஸீன்களை    மிக    
ஆரம்பகட்டத்தில்     வரிசைப்படுத்தும்    
முயற்சி     இது     என்பதை     மறவாதீர்கள்.     
முடிவில்     எழுதப்படும்      திரைக்கதை     
இந்த      லிஸ்ட்டில்     இருந்து     மாறுபடலாம்.     
ஆனால்,    திரைக்கதை    எழுதத்     
துவங்குமுன்னர்     இப்படி     
பாயிண்ட்களாக     
எழுதிக்கொண்டால்     அதன்பின்     
முன்பின்னாக     இந்தப்    பாயிண்ட்களை     
மாற்றி,     திரைக்கதைக்கு     
சுவாரஸ்யம்      கொடுக்கலாம்     என்பதே     
ஸிட் ஃபீல்ட்     சொல்லும்     வழிமுறை.






இன்னொரு     மிகமுக்கியமான     
விஷயம்      என்னவெனில்,     
திரைக்கதை      உருவாக்கமும்,     
நிஜமான      திரைக்கதையும்     
வெவ்வேறான     வழிமுறைகள்    என்பது.     
ஒரு     உதாரணத்துக்கு,     
‘கதாநாயகியை     மதுரையில்     
வில்லனிடமிருந்து     காப்பாற்றுகிறான்     
ஹீரோ’   ( கில்லி )   என்று     
ஒரு   பாயிண்ட்    எழுதுகிறோம்.    
ஆனால்,     திரைக்கதை     எழுதும்போது     
இந்த    ஒரே    ஒரு    வரியை    எவ்வளவு     
பெரிதாக      விரிவாக்கி    
எழுத    வேண்டியிருக்கிறது?     
மதுரையில்    எந்த    இடம்?    
அந்த     இடத்தில்    வில்லனும்     
ஹீரோவும்    எப்படி      
சந்தித்துக்     கொள்கிறார்கள்?     
எந்த     வழிமுறையை     
உபயோகப்படுத்தி     கதாநாயகியை     
ஹீரோ     காப்பாற்றுகிறான்?     
எப்படி      தன்னுடன்    அழைத்துச்      
செல்கிறான்?       
இத்தனையையும்     திரைக்கதை     
எழுதும்போது     விரிவாக,      
தெளிவாக    எழுத     வேண்டும்    அல்லவா?     
இந்த     ஒரு     பாயிண்டே     திரைக்கதையில்     
ஒரு    பெரிய    சீக்வென்ஸாக     
(  ஸீன்களின்   தொகுப்பு  )   வருகிறது.     
இதுதான்     திரைக்கதை      
உருவாக்கத்துக்கும்      
நிஜமான      திரைக்கதைக்கும்     
உள்ள     வேறுபாடு.






எனவே,      திரைக்கதை     எழுதத்     
துவங்குமுன்பாக     இப்படி     
பாயிண்ட்      பாயிண்டாக      கதையைப்     
பிரித்து,          ஒவ்வொரு      
பாயிண்ட்டையும்      ஒவ்வொரு     
கார்டில்    தனியாக        எழுதிக்கொள்வது    
ஒன்று.       
இதன்பின்      திரைக்கதையை     
இந்தப்     பாயின்ட்களின்     
துணையோடு     விரிவாக்கம்      
செய்வது     மற்றொன்று.       
இந்த     இரண்டையும்     
போட்டுக்     குழப்பிக்கொள்ளக்கூடாது   
என்கிறார்     ஸிட்.      
இது    ஏன்    எனில்,   மேலே    பார்த்ததுபோல்     
ஒரே    ஒரு    பாயிண்ட்,     
திரைக்கதையில்     சில     பக்கங்கள்     
அளவு     வர     வாய்ப்பு      இருக்கிறது.     
ஆகவே     பாயிண்ட்கள்     எழுதும்போது    
மிக     விரிவாக      எழுதத்     தேவையில்லை;     
போலவே      திரைக்கதை     எழுதும்போது      
மிக     சுருக்கமாக       எழுதவும்     
தேவையில்லை.






திரைக்கதையின்      ஒவ்வொரு     
முப்பது     பக்கத்துக்கும்      
பதினான்கு      பாயிண்ட்கள்.     
அதாவது,     முதல்     பகுதியான      
அறிமுகத்துக்கு   14.     இரண்டாவது      
பகுதியான       எதிர்கொள்ளலுக்கு   28     
(  காரணம்,    எதிர்கொள்ளல்,     
கிட்டத்தட்ட    60   பக்கங்கள்     
வரக்கூடியது என்பதால்  ).     
அப்படியென்றால்     மூன்றாவது     
பகுதியான     முடிவுக்கு?    
14.   ஆகமொத்தம்   14+28+14=52.   
ஒரு    சுவாரஸ்யமான     
திரைக்கதைக்கு,     கிட்டத்தட்ட     
52   பாயிண்ட்களாக      
கதையைப்     
பிரித்துக்கொண்டால்     
போதுமானது     என்பது   ஸிட்     
சொல்லும்    கணக்கு.






இங்கே    ஒரு    கேள்வி    எழலாம்.     
‘என்    மனதில்     இருக்கும்    கதையை     
நான்    பாட்டுக்கு    விரிவாக     
எழுதிக்கொண்டே     போகலாமே?     
எதற்கு     இப்படி     கணக்கெல்லாம்     
போட்டு    பாயிண்ட்     பாயிண்டாக    
பிரித்து,     ஒவ்வொரு      
பகுதிக்கும்      இத்தனையித்தனை    
என்றெல்லாம்      
குழப்பிக்கொள்ளவேண்டும்?’




காரணம்     இருக்கிறது.    
ஏற்கெனவே      பார்த்ததுபோல்,    
திரைக்கதை     எழுதுவது      என்பதே     
கண்ணைக்    கட்டி    காட்டில்   
விட்டதுபோலத்தான்.     
அந்த     இருட்டில்    நமக்கு    உதவி     
செய்வதுதான்    Plot Pointகளின்     
வேலை.    ஆனால்,    மொத்தம்      
இரண்டே    ப்ளாட்    
பாயிண்ட்களை     
வைத்துக்கொண்டு      
ஒட்டுமொத்த      திரைக்கதையையும்     
எழுதிவிட     முடியாது. 







120   பக்கங்களில்     
அமையப்போகும்     திரைக்கதையை     
ஓரளவு     தெளிவாக     
வடிவமைத்துக்கொள்ள,     
ஒவ்வொரு     பகுதியையும்     இப்படி     
பிரிப்பது    அவசியம்    உதவும்.     
நமது    கையில்    52   பாயிண்ட்கள்     
இருக்கிறது      என்றால்,     
அவை     ஒவ்வொன்றையும்     
விரிவாக்கினாலே     திரைக்கதை     
ஒரு   ஐம்பது     அறுபது    சதவிகிதம்    
முடிந்துவிடும்.      
இதன்பின்      எழுதிமுடித்த     
திரைக்கதையை     மீண்டும்    
மீண்டும்     செப்பனிடுவது     மூலம்     
அதன்     இறுதி     வடிவத்தை     
தயார்     
செய்துவிடமுடியும்.      
எனவே,    ஒரு    கடினமான      
விஷயத்தை     எளிதான      
துண்டுகளாக     
உடைத்துக்கொண்டுவிட்டால்     
அந்தத்     துண்டுகளை    முடிப்பது     
மூலம்     இறுதியில்     
எல்லாவற்றையும்    ஒன்றுசேர்த்து     
நாம்    நினைத்த     விஷயத்தை     
முடித்துவிடலாம்     என்பதே     
இந்த     வழிமுறையின்     அடிப்படை.







இப்படி    பாயிண்ட்களாக    பிரிப்பதன்    
பிற     அனுகூலங்களையும்,     
இவற்றைப்பற்றிய     
ஸிட்   ஃபீல்டின்     அனுவத்தின்     
துளிகளையும்,     
வேறு    பல     சுவாரஸ்யங்களையும்    
இந்தக்    கட்டுரைத்    தொடரின்     
அடுத்த    பகுதியில்    மிக    
விரைவில்     பார்க்கலாம்.







தொடரும்…











கருத்துகள்

பிரபலமான இடுகைகள்