திரைக்கதை 23

 




சென்ற    கட்டுரையில் ,    
ஸிட் ஃபீல்டின்     புத்தகத்தின்    
11 வது    அத்தியாயமான   
The  Sequence    என்பதைப்    
பார்த்தோம்.   




அதில்    அவர்    கொடுத்துள்ள    
திரைக்கதை    உதாரணமான    
‘ஜுராஸிக்  பார்க்’   படத்தில்     
டேவிட் கோயெப்     எழுதியிருந்த   
சில    பக்கங்களைப்   பார்த்தோம்.     




அந்த    ஸீக்வென்ஸ்   பற்றிய    
ஸிட் ஃபீல்டின்    அலசலை     இப்போது    
இந்தக்   கட்டுரையில்    பார்ப்போம்.







இந்த   action   ஸீக்வென்ஸ்தான்     
ஜுராஸிக்   பார்க்    
திரைப்படத்தின்    விறுவிறுப்பை     
ஆரம்பித்து    வைக்கிறது.     
இந்த    நிமிடத்தில்   இருந்து    
படத்தின்   இறுதிவரை    நான் -  ஸ்டாப்    
action   காட்சிகள்   ஒன்றின்பின்    
ஒன்றாக    வரப்போகின்றன. 






இந்தக்    காட்சி   எப்படி   ஆரம்பிக்கிறது    
என்பதை    ஒவ்வொரு   நொடியாக    
நம்   கண்   முன்   விவரிக்கிறார்   கோயெப்.    
அப்படி    அவர்   காட்சிகளை    
விவரிக்கும்போது    நீளமான    
பேராக்கள்,    ஃபுல்ஸ்டாப்    
இல்லாத    வாக்கியங்கள்   என்று    
எழுதவில்லை     என்பதையும்     
கவனியுங்கள்.     


ஒரே   வரி.    அல்லது   ஓரிரு   வரிகள்    
மட்டுமே.     அதேபோல்     வரிகளுக்கு    
இடையே    இருக்கும்   ஸ்பேஸ்.     
இதுவும்    முக்கியம்.     
ஸ்பேஸ்   என்பது   ஏன்    
என்றால்,     
திரைக்கதையின்    
பக்கங்களை     கவனிக்கையில்     
வரிகளால்    ஆக்கிரமிக்கப்பட்டு    
முதல்    பார்வையிலேயே    படிக்க     
ஆசையைத்     தூண்டாதவண்ணம்     
அவை    இருக்கக்கூடாது    என்பது    
ஸிட் ஃபீல்ட்    கருத்து. 






இதனால்    ஆங்காங்கே    ஸ்பேஸ்கள்    
அதிகமாக    இருப்பது    அந்தப்     
பக்கத்தின்    படிக்கும்    தன்மையைக்    
கூட்டும்    (  அதற்காக   ஒரேயடியாக   
ஸ்பேஸ்களால்    பக்கங்களை    நிரப்பி,    
மிகமிகக்    குறைவான     
திரைக்கதையை    ஒவ்வொரு    
பக்கத்திலும்     எழுதலாம்    
என்று    அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது  ).





இந்தத்    திரைக்கதையில்,     
கதாபாத்திரங்களும்    சரி  –   ஆடியன்ஸும்   
சரி,    ஒரே    சமயத்தில்தான்    இந்த   
action   காட்சிகளை    எதிர்கொள்கின்றன.    
இந்தக்    காட்சிகளால்    
நாம்    கட்டுண்டுபோவதால்,     
கதாபாத்திரங்கள்     அனுபவிக்கும்    
அதே    உணர்வுகளை    நம்மாலும்     
அனுபவிக்க    முடிகிறது.     
இந்தப்    பக்கங்களில்    விவரிக்கப்பட்டுள்ள   
action    காட்சிகளுக்கு    ஒரு   தெளிவான    
ஆரம்பம்,   நடுப்பகுதி   மற்றும்   முடிவு     
ஆகியவை     இருக்கின்றன.     
இந்த    ஸீக்வென்ஸின்    ஒவ்வொரு    
வரியும்,     சம்பவங்களின்    
விறுவிறுப்பைக்    கூட்டுகின்றன.    
விளைவாக    நமக்குக்    கிடைப்பது     
ஒரு    அட்டகாசமான    ஸீக்வென்ஸ்.








ஆரம்பத்தில்,    காரில்    
வைக்கப்பட்டுள்ள    தண்ணீர்    
கிளாஸ்கள்    அதிர்வதில்   தொடங்குகிறோம்.    
அங்கு    எதுவோ    
நடந்துகொண்டிருக்கிறது    என்பது    
நன்றாகவே    நமக்குப்    புரிந்தாலும்,    
இன்னமும்    அந்த    அதிர்வுக்குக்    
காரணம்   என்னவென்று     
நமக்குத்    தெரிவதில்லை.    
இதன்பின்    திரைக்கதையில்    
என்ன    இருக்கிறது   என்று    
பார்த்தால்  –   ‘BOOM.   BOOM.   BOOM.’.    
ஒவ்வொரு    பூம்    வார்த்தையும்    
நமது    மனதில்   ‘பூம்’   என்ற    
சத்தத்தை    ஒலிக்கிறது    அல்லவா?    
அந்த   ஒவ்வொரு   ‘பூம்’    சத்தமும்    
சிறுகச்சிறுக     
அதிகரித்துக்கொண்டே     போகிறது.     
அந்த    நொடியின்    சஸ்பென்ஸும்    
விறுவிறுப்பும்    இந்த    
வார்த்தைகளால்      அதிகரிக்கப்படுகின்றன.




 
அதேபோல்,     இங்கு    புரிந்துகொள்ள    
கடினமான    மிகப்பெரிய   வரிகள்     
எதுவுமே    இல்லை.      
இதற்கெல்லாம்    மேலே,     
இதைப்போன்ற     
திரைக்கதைகளைப்     
படமாக்குவதில்     
ஸ்பீல்பெர்க்     ஜித்தர்.







தண்ணீர்    அதிர்கிறது.    பூம்.  பூம்.  பூம்.     
இதுவரை    நாம்    எந்த   action    
காட்சியையும்    பார்க்க     
ஆரம்பிக்கவில்லை.     
எல்லாமே    வெளிப்படையாக     
இல்லாமல்,     
‘எதுவோ     நடந்துகொண்டிருக்கிறது’    
என்ற    பூடகமான    எண்ணத்தையே    
நமக்கு      அளித்துக்கொண்டிருந்தது.     
இந்த     நேரத்தில்தான்    actionல்     
அடுத்த     கட்டத்துக்குப்     
போகிறோம்.      திரைக்கதை,     
நமக்கு    எதையோ    காட்டப்போகிறது.    
அது…




ஆடு.


ஆடு    கட்டப்பட்டிருந்த    இடத்தில்    
அதைக்    காணவில்லை.    
இந்த   விஷுவல்,    படம்   பார்க்கும்    
ஆடியன்ஸின்    
இதயத்துடிப்பை    அதிகரிக்கவைக்கிறது.     
திரைக்கதையின்    வேகமும்    
கூடுகிறது.     பொதுவாக,     
ஒரு   நல்ல   action    சீக்வென்ஸ்    
என்பது,    படிப்படியாக,     
வார்த்தை    வார்த்தையாக,    
வரி   வரியாக     திரைக்கதையில்    
விறுவிறுப்பை     
கூட்ட வேண்டும்.      
எல்லாவற்றையும்    அதனதன்    
இடத்தில்    பொருத்தி,     
மெல்ல    நாம்   உள்ளே    நுழையும்போது    
நம்மை    அதன்     வேகத்தோடு    
சேர்த்து    கட்டிப்போடவேண்டும். 







டெர்மினேட்டர்  2    
படத்தில்    அர்னால்ட்      சிறுவனைக்     
காப்பாற்றி     
அழைத்துக்கொண்டுபோகும்     
காட்சியின்    வேகம்    எப்படி    ( சேஸிங் ) ? 


வேட்டையாடு    விளையாடு      
படத்தில்      வில்லன்களோடு      
ஒரே     அறையில்     மாட்டிய     ராகவன்     
எப்படி     அங்கிருந்து     தப்புகிறார்?     
இந்தக்     காட்சியின்     
விறுவிறுப்பு     நினைவிருக்கிறதா     
( த்ரில்லர் ) ?    



கில்லி,    தூள்    படங்களில்,      
கதாநாயகியை      
வில்லன்களிடமிருந்து      காப்பாற்றும்     
ஹீரோ     சண்டையிடும்போது     நமக்கும்     
எப்படி     அந்த     
விறுவிறுப்பு     
தொற்றிக்கொள்கிறது?      
இப்படி,    த்ரில்லர்    காட்சிகளாக     
இருந்தாலும்    சரி,     
சேஸிங்     காட்சிகளாக      
இருந்தாலும்    சரி,      
டென்ஷனை      அதிகரிக்கும்     
காட்சிகளாக       இருந்தாலும்     
சரி  –   திரைக்கதையில்     இருக்கும்    
வேகம்,     நமது      சுவாரஸ்யத்தை      
கட்டாயம்       அதிகரிக்கவைக்கும்.






சரி.    இப்போது      திரைக்கதைக்கு     
மீண்டும்      வருவோம்.     
ஆடு    கட்டப்பட்டிருந்த     இடத்தில்     
வெறும்     சங்கிலி     
மட்டும்தான்      
ஆடிக்கொண்டிருக்கிறது.     



திடீரென..




தடால்!




இந்த    சத்தம்    மட்டுமே    நம்மைத்      
தூக்கிவாரிப்       போடவைப்பதற்கு    
போதுமானது.     
இதன்   பின்னர்    தான்     காரின்     
கூரையில்     பிய்ந்துபோன      ஆட்டின்     
காலைப்        பார்க்கிறோம்.      
அந்த      நேரத்தில்தான்     அங்கு      
என்ன       நடக்கப்போகிறது      
என்பது       நமக்கும்,      
படத்தின்       
கதாபாத்திரங்களுக்கும்      
தெரியவருகிறது.      
பயம்     நமது      முதுகெலும்பில்     
மெல்ல ஏறுகிறது.      
டைரான்னோசார்ஸ்     
ரெக்ஸ்       கதாபாத்திரங்களைத்       
துரத்தப்போகிறது      என்பது     
நமக்குப்      புரிகிறது.





இது    ஒரு    நல்ல    action      
சீக்வென்ஸுக்கு       அடையாளம்     
என்பது      ஸிட் ஃபீல்டின்      கூற்று.




சரி.     அப்படியென்றால்    action     
சீக்வென்ஸ்     என்பது      எப்படி    
எழுதப்படக்கூடாது?





அதிகப்படியான       
வார்த்தைகளையும்     வரிகளையும்     
வைத்து     நுணுக்கமாக       எழுதப்பட்டு,    
படிப்பதற்கு     ஒரு     அழகான      
அனுபவத்தைத்      தரவேண்டும்      
என்ற     எண்ணத்தில்    action      
சீக்வென்ஸ்கள்      எழுதப்பட்டால்,     
அந்த      வார்த்தைக்குவியலுக்கு     
இடையே      சொல்லவந்த      
விஷயம்       புதைந்துவிடும்.      
அதற்காக      அப்படி      எழுதவே     
கூடாது     என்பதும்      அர்த்தமல்ல.     
அளவாக,     மிக    எளிய       
வார்த்தைகளை      வைத்தே,     
படிப்பவர்களுக்கோ     அல்லது     
படத்தைப்      பார்ப்பவர்களுக்கோ      
ஒவ்வொரு     நொடியும்      
இதயத்துடிப்பு      எகிறும்வகையில்    
action     சீக்வென்ஸ்களை     
எழுதமுடியும்   –   எழுதவேண்டும்     
என்பதே     ஸிட்  ஃபீல்ட்     சொல்லவரும்     
விஷயம்.







இதுவரை    சொன்னது,     
action     சீக்வென்ஸ்.     இப்போது,     
ஒரு    சீக்வென்ஸின்     மூலம்     
கதாபாத்திரத்தின்      
இயல்பை   –   அதன்   character  –    
எப்படி      வெளிப்படுத்துவது     
என்று      பார்க்கப்போகிறோம்.     
இது    ஏன்    என்பது,     
சீக்வென்ஸ்      என்பதன்      
விளக்கத்தைப்     பார்த்தால்      புரிந்துவிடும். 






ஸீக்வென்ஸ்    என்பது   –    ஆரம்பம்,     
நடுப்பகுதி     மற்றும்     முடிவோடு     
கூடிய       ஸீன்களின்     வரிசை.     
இந்த     ஸீன்கள்    ஒரு    குறிப்பிட்ட      
நோக்கத்தோடு      அமைந்திருக்கும்.    
இந்த     நோக்கம்     என்பதுதான்     
அந்த       வரிசையான     ஸீன்களை      
இணைக்கும்      புள்ளி.      



உதாரணத்துக்கு,      
நாம்     மேலே      பார்த்ததுபோல்,      
ஒரு     பாங்க்      கொள்ளை.      
அல்லது    ஒரு     மரண       ஊர்வலம்.      
அல்லது    ஒரு      திருமணம்.      
அல்லது     ஒரு     துரத்தல்.     
அல்லது     ஒரு      தேர்தல்.     
அல்லது     ஒரு     பயணம்.       
ஒரு     ஸீக்வென்ஸ்      என்பதன்      
நோக்கத்தை     ஓரிரு      
வார்த்தைகளில்       சொல்லமுடிய        
வேண்டும்.        திரைக்கதைகளில்     
பலமுறை,     இந்த      
ஸீக்வென்ஸ்களை வரிசைப்படுத்துவதன்மூலமே     
திரைக்கதை         
முழுமையடைந்திருக்கிறது.








ஆகவே,    எந்த     
நோக்கத்தையும்     
தெரியப்படுத்தும்     சீக்வென்ஸ்,      
அதில்     ஈடுபடும்     
கதாபாத்திரத்தின்     இயல்பையும்     
நமக்குத்      தெரியப்படுத்தும்.      





உதாரணத்துக்கு,     
சிறுவனைக்     காப்பாற்றும்     
அர்னால்ட்,       மனிதாபிமானமிக்க      
ரோபோ     என்பது     அந்த     
சீக்வென்ஸைப்       பார்க்கும்போதே     
நமக்குத்       தெரிந்துவிடுகிறதல்லவா?     
அதேபோல்,      பேய்     வீட்டுக்குள்     
கண்டபடி      அலைக்கழிக்கப்படும்     
கதாநாயகன்    ( பீட்ஸா ),      
பயந்த     சுபாவம்    உள்ளவன்     
என்பதும்      அக்காட்சிகளைப்     
பார்த்தாலே      புரிகிறது.






இந்த     இயல்பு    என்பது     
மட்டுமன்றி,     கதாபாத்திரத்தின்     
லட்சியம்,     நோக்கம்     ஆகியவையும்     
சில    சீக்வென்ஸ்களில்    
விளக்கப்படுவதுண்டு
இங்கே,      தனது      புத்தகத்தில்      
ஒரு     அட்டகாசமான      சீக்வென்ஸை      
ஸிட்   ஃபீல்ட்     
விளக்கியிருக்கிறார். 





இது    American  Beauty     படத்தில்     
இடம்    பெறுவது.     உடனேயே     
‘ இது    எனக்குப்    புரியாது ’     
என்று      எண்ணிவிடாதீர்கள்.      
இந்த     சீக்வென்ஸை    மிக    எளிதாக     
விளக்க      முயல்கிறேன்.      
தமிழில்    இது    போன்ற     சீக்வென்ஸ்      
உதாரணம்     இங்கே    கொடுக்க     
இயலாது.     
காரணம்    இதுபோன்ற      சீக்வென்ஸ்கள்    
தமிழில்    மிகமிக     அரிது.     
ஆகவேதான்     ஒரிஜினல்     


உதாரணம்.      


ஒகே.     சீக்வென்ஸ்     இதுதான்.     
படத்தில்,     கரோலின்     என்ற     பெண்,     
ஒரு    ரியல்    எஸ்டேட்   ப்ரோக்கர்.     
ஒரு    வீட்டை     
விற்கவேண்டும்  –   விற்றே      
ஆகவேண்டும்     என்பது     அவளது     
நோக்கம்.      இந்த     நோக்கம்      
நிறைவேறியதா     என்பதுதான்     
சீக்வென்ஸ்.






சீக்வென்ஸின்     துவக்கத்தில்,     
‘For Sale’    என்ற     போர்டை   ஒரு     
வீட்டின்    முன்னாள்    கரோலின்     
வைப்பதைக்      காண்கிறோம்.     
வீட்டினுள்     செல்லும்    கரோலின்,     
ஒரு     இயந்திரத்தைப்     போல்      
வெறித்தனமாக     அந்த     வீட்டை     
சுத்தப்படுத்த     ஆரம்பிக்கிறாள்    
(  யெஸ்.    அமெரிக்காவில்     
அப்படித்தான்  ).        ‘இந்த    வீட்டை     
இன்று    நான்    விற்றே   தீருவேன்’;     
‘இந்த    வீட்டை     இன்று     நான்     
விற்றே     தீருவேன்’      
என்று     இடைவெளி     விடாமல்     
ஒரு     மந்திரம்      
போல      முணுமுணுத்துக்கொண்டே     
வீட்டின்     ஒவ்வொரு     பகுதியாக      
சுத்தம்     செய்கிறாள்.      
இதுதான்     இந்த      சீக்வென்ஸின்     
துவக்கம்.







இதன்பின்,      அழைப்பு     மணியின்      
சத்தத்தைக்      கேட்டு     வீட்டின்     கதவை     
வலிந்து     
வரவழைத்துக்கொண்ட     
புன்னகையோடு      கரோலின்     
திறப்பதைக்     காண்கிறோம்.      
‘வணக்கம்..   
என்    பெயர்    கரோலின்..     
வாருங்கள் ..      
இந்த      வீட்டை    சுற்றிக்காட்டுகிறேன்’     
என்று     சொல்லி,      வீட்டின்     
ஒவ்வொரு     அறையாக       
வந்திருக்கும்      நபர்களுக்குக்     
காண்பிக்கிறாள்.      
இந்தக்    காட்சி   எப்படி      
அமைக்கப்பட்டிருக்கிறது     என்றால்,    
ஒரே    தம்பதியினருக்கு    வீடு    முழுதும்    
அவள்     சுற்றிக்காட்டுவது     
போல்    படத்தில்      இல்லை;    
மாறாக,     வீட்டின்      வரவேற்பறையை    
ஒரு     தம்பதியினருக்குக்     காட்டுவாள்.     
அதன்பின்     அடுத்த     அறையில்     
அவள்     நுழையும்போது      
அது     இன்னொரு     தம்பதியினராக      
இருக்கும்.     அதற்கடுத்த      அறையில்     
அவள்    நுழைவது     வேறொரு     
தம்பதியினரோடு.      
இப்படி    ஒரே    நாளின்    பல    
நேரங்களில்     பலபேருக்கு     அவள்    
அந்த     வீட்டை     சுற்றிக்காட்டுகிறாள்     
என்பதை    அருமையாக     
எடுத்திருப்பார்கள்     
இப்படத்தில்.        இப்படி    நாள்    முழுக்க     
வீட்டை      சுற்றிக்காட்டுகையில்,     
அவர்களில்    சிலர்    வீட்டின்     
சில     பகுதிகளைப்     பார்த்து      
கேலியாக     கமெண்ட்      
அடிப்பதையும்     பார்க்கிறோம்.     
அப்படி     அவர்கள்     பேசும்போது     
கரோலின்     அதற்கேற்றவகையில்     
பதிலளிக்க     முயல்வாள்.     
ஆனால்    அவர்கள்    அதை    
சட்டையே     செய்யாமல்      
அங்கிருந்து      அகன்றுவிடுவார்கள்.








இக்காட்சிகளில்,     
வீடு    என்பது    context .      அதாவது     
சூழ்நிலை      வீட்டைக்     
காரணமாக       வைத்துத்தானே     
இந்த     ஸீக்வென்ஸ்    முழுதும்     
நடக்கிறது?     
அதேபோல்    அந்த     வீட்டில்     
நடைபெறும்     
சம்பவங்கள்  –  ஒவ்வொரு     
தம்பதியினருக்கும்    கரோலின்     
வீட்டை     சுற்றிக்காட்டுவது,      
அவர்கள்     கமெண்ட்     அடிப்பது,     
அதைப்பற்றிக்     கவலைப்படாத      
கரோலின்    மறுபடி    வேறொரு    
தம்பதியினருக்கு    வீட்டை     
சுற்றிக்காட்டுவது  –  ஆகியவை,    
இந்த    சீக்வென்ஸின்    content.    
அதாவது      உள்ளடக்கம்.     
இந்த   context  &  content    பற்றி     
இதோ    இந்த      அத்தியாயத்தில்     
விளக்கமாகக்     
காணலாம்.       
இறுதியாக     இந்த     
சீக்வென்ஸின்      இறுதிப்பகுதி.     
மாலை    நேரம்.     வீட்டின்     
ஜன்னல்களின்     திரைச்சீலைகளை     
கரோலின்      இறக்கிவிடுகிறாள்.     
இதன்பின்:







‘திரைச்சீலைகளின்     நிழல்     
கரோலினின்     முகத்தில்    விழுகிறது.     
எங்கும்    நகராமல்     
அப்படியே      நின்றுகொண்டிருக்கும்     
கரோலின்,    அழ     ஆரம்பிக்கிறாள்.     
விம்மல்கள்.      அவளது     கட்டுப்பாட்டையும்     
மீறி    அவளது    வாயில்     இருந்து      
வெளிப்படும்     சிறிய      விம்மல்கள்.    
அவை     கட்டுப்படுத்தமுடியாத      
அழுகையாக     மாறுகின்றன.    
திடீரென,     தன்னையே     
வேகமாக      அறைந்துகொள்கிறாள்     
கரோலின்.     ‘நிறுத்து’.      
ஆனால்     அவளது     கண்ணீர்     
தொடர்கிறது.      
மறுபடியும்     
தன்னையே      அறைந்துகொள்கிறாள்.     
‘Weak.  Baby.  Shut  up. Shut  up.’     
மறுபடி    மறுபடி    
தன்னைத்தானே     
அறைந்துகொள்கிறாள்.     
அழுகை     நிற்கும்வரை.     அதன்பின்,     
ஆழமான       பெருமூச்சு     
விட்டுக்கொண்டே,     எல்லாமே     
சரியாகும்வரை      
அங்கேயே      நின்றுகொண்டுவிட்டு,     
எதுவுமே     நடவாததுபோல்     
வீட்டைவிட்டு     வெளியே    வருகிறாள்.     
நாம்    அந்த     இருட்டான,     
காலி      அறையினுள்ளேயே     
விடப்படுகிறோம்.’





இதன்    ஆங்கில     வடிவம்    இங்கே:


Standing  very  still,  with  the  blinds  casting   
shadows  across  her  face,  she  starts  to  cry:   
brief,  staccato  SOBS  that  seemingly  escape   
against  her  will.  Suddenly  she  SLAPS  herself,  
hard.

CAROLYN

Shut  up.  Stop  it.  You…   
Weak!
But  the  tears  continue.  She  SLAPS  
herself  again.

CAROLYN  ( cont’d )

Weak.  Baby.  Shut up.  Shut up!  Shut up!
She  SLAPS  herself  repeatedly  until  
she  stops  crying.  She  stands  there,   
taking  deep  breaths  until  she  has  everything   
under  control,  then  pulls  the  blinds  shut,   
once  again  all  business.  She  walks  out  calmly,   
leaving  us  alone  in  the  dark,  empty  room.







கரோலினின்   character   பற்றி    
இந்தக்    காட்சி    எவ்வளவு    தெளிவாக    
நமக்கு     விளக்குகிறது?      
‘இந்த   வீட்டை    இன்று    விற்றே    தீருவேன்’     
என்ற     அவளது     
லட்சியத்தில்,       காலையிலிருந்து      
அந்த     வீட்டுக்காக    எத்தனை    கடினமாக      
அவள்      உழைத்திருந்தும்,     
தோற்று     விடுகிறாள்.      
தோல்வி     என்பது     
அவளைப்பொறுத்தவரையில்     
ஒரு    இயலாமை.    வீக்னெஸ்.      
இதனால்தான்    அந்த      
இயலாமையை      
தன்னிடமிருந்து       அகற்றவேண்டும்     
என்று      தன்னைத்தானே 
சமாதானப்படுத்திக்கொண்டு,     
நிலைமை    கட்டுக்குள்     வந்ததும்     
அவளால்      அங்கிருந்து      
கிளம்பமுடிகிறது.







இதுதான்     ஒரு    சீக்வென்ஸ்.      
ஒரு    குறிப்பிட்ட      
நோக்கத்தால்      இணைக்கப்பட்ட     
வரிசையான      ஸீன்கள்.     
ஆரம்பம்,     நடுப்பகுதி     மற்றும்     
முடிவுடன்.       இப்படி,     
நாம்    பார்த்த      இரண்டு     
உதாரணங்களின்    மூலம்,    
action  &  character     ஆகியவை     
இரண்டும்      
இணைந்திருந்தால்தான்     
திரைக்கதையின்     
அனுபவத்தை   –   படிக்கும்போதும்     
காட்சியாகப்     
பார்க்கும்போதும்   –   நமக்கு      
சிறப்பாக்கித்     தருகிறது.






இத்துடன்     ஸிட் ஃபீல்டின்     
புத்தகத்தின்      பதினோராவது     
அத்தியாயமான    ‘The Sequence’     
என்பது     முடிகிறது.     
இந்த      அத்தியாயத்தை     முழுக்கக்     
கவர்    செய்யும்     கட்டுரைகள்    
இதோ:




The Sequence

1. Chapter 21

2. Chapter 22

3. This Chapter





மிக    விரைவில்,    அடுத்த     
அத்தியாயத்தில்        சந்திப்போம்..










தொடரும் . . .














கருத்துகள்

பிரபலமான இடுகைகள்