திரைக்கதை 16
சென்ற அத்தியாயத்தில் ,
திரைப்படத்தின் ஆரம்பக்
காட்சியான Inciting Incident
மற்றும் திரைப்படத்தின்
மைய நிகழ்ச்சியான
Key Incident ஆகியவை
எப்படி இருக்கவேண்டும்
என்பதை
சிட் ஃபீல்டிடமிருந்து
அறிந்துகொண்டோம்.
இப்போது, இந்த
இரண்டு சம்பவங்களையும்
தயார் செய்துகொண்ட பின்பு
திரைக்கதை எழுத
ஆரம்பித்துவிடலாமா,
அல்லது எழுதத்துவங்குமுன்
வேறு ஏதேனும்
தேவைப்படுகிறதா என்பதைப்
பற்றி விரிவாகப்
பார்க்கலாம்.
9. Plot Points
கதையை தயார் செய்தாகிவிட்டது.
அதாவது, கதையின் ‘ஒன் லைன்’
ரெடி
( ராக்கெட் கடத்தப்படுகிறது.
கதாநாயகன் அதனை
மீட்கிறான் – விக்ரம்,
மனைவியைக் கடத்திய
கிரிமினலை எப்படி
வெற்றிகொள்கிறான் போலீஸ்
அதிகாரி – காக்க காக்க,
சமுதாய அலட்சியத்தால் மகளை
இழந்த சுதந்திரப் போராட்டத் தியாகி,
அரசு இயந்திரத்தை எப்படித்
திருத்த முயல்கிறார்? – இந்தியன்,
தன்னைக் கொல்ல ஆட்களை
ஏவிவிட்ட தாதாவிடமிருந்து
எப்படித் தப்பிக்கிறான்
அடியாள்? – ஆரண்யகாண்டம் ).
அடைப்புக்குறிக்குள்
கொடுக்கப்பட்ட படங்களின்
லாஜிக், அவற்றில் உள்ள
உபகதைகள் ஆகியவற்றை
ஒருகணம் மறப்போம்.
படங்களின் பிரதான ஒன் லைனை
மட்டும் கவனத்தில்
வைப்போம்.
குறைந்தபட்சம் 120
நிமிடங்களுக்கான
திரைக்கதையை இப்போது
தயார் செய்யவேண்டும்.
இந்த ஒன்லைனை
மட்டும் வைத்துக்கொண்டு அதனை
ரெடி செய்ய முடியுமா?
ஒரு சில விதிவிலக்குகளால்
அது முடியலாம். ஆனால்,
அவர்களுக்கேகூட,
தன்னிஷ்டத்துக்குக் கதையை
அலைபாய விடாமல் தடுக்க
சில உபகரணங்கள்
தேவை. இல்லையெனில்,
பல லாஜிக் மீறல்களுடன்,
கேலிக்கூத்தாகவே அந்தத்
திரைக்கதை அமையும்.
ஒரு சிறிய உதாரணத்தைக்
கொடுக்கிறார்
சிட் ஃபீல்ட்.
பிரம்மாண்டமானதொரு மலையை
ஒரு நபர் ஏற முயற்சி செய்கிறார்
என்று வைத்துக்கொள்வோம்.
ஒரு குறிப்பிட்ட பகுதி
வரையிலும், அடிவாரத்திலிருந்து
அவரால் ஏற முடிந்துவிட்டது.
சுலபமாக அங்கங்கே இருக்கும்
கற்களில் காலை வைத்து,
தொங்கி, ஏறிவிட்டார். ஆனால்,
இப்போது, தரையிலிருந்து
நூறடி உயரம் ஏறியாகிவிட்டபின்,
இஷ்டப்படி ஏற முடியாது.
கரணம் தப்பினால் மரணம்.
ஆகவே, கவனமாக, அந்த நபரின்
முன்னால் என்ன இருக்கிறது,
அவருக்கு மேலே என்ன
இருக்கிறது என்பதைக்
கருத்தில் கொண்டு,
ஏதேனும் ஒரு மூவ் மட்டுமே
ஒரு சமயத்தில் அவரால்
செய்ய முடியும்.
மலையை முழுதுமாக ஏறியபின்,
வந்த வழியை நன்றாக
அலசலாம்.
ஆனால், ஏறிக்கொண்டிருக்கும்போது
ஒரு சமயத்தில் ஒரு மூவ் தான்.
அதுவும், மேலே ஏற மட்டுமே.
தத்தக்கா புத்தக்கா என்று
கண்டபடி ஆடினால்,
தரையில் விழுந்து சாக
வேண்டியதுதான்.
இதைப்போன்றுதான்
திரைக்கதை எழுதுவதும்.
ஒரு குறிப்பிட்ட பக்கத்தில்
இருக்கும்போது,
இதுவரை எழுதிய
பக்கங்களையும்,
இபோது
எழுதிக்கொண்டிருக்கும்
பக்கத்தையும் மட்டுமே நம்மால்
பார்க்க முடியும்.
பல சமயங்களில்,
இனிமேல் என்ன
எழுதப்போகிறோம்
என்பதே குன்ஸாகத்தான் தெரியும்.
எப்படி நாம் நினைத்த
முடிவை அடையப்போகிறோம்?
அந்த முடிவை அடைய,
கதாபாத்திரங்கள் என்ன
செய்ய வேண்டும்?
இவையெல்லாமே,
பல சமயங்களில்
தெரியாமலே போய்விடுவதும்
உண்டு.
எத்தனை நேரம்தான்
கும்மிருட்டிலேயே
நடந்துகொண்டிருக்க முடியும்?
வழியே தெரியாமல், செக்குமாடு
போல் சுற்றிச்சுற்றி
வந்துகொண்டு
இருக்கவேண்டியதுதான்.
கும்மிருட்டில், தொலைதூரத்தில்
ஒரு வெளிச்சம் தெரிந்தால்,
அதனை நோக்கி
எப்படியாவது நடந்துவிடமுடியும்
அல்லவா?
அந்த இடத்துக்குச் சென்ற
பின்னர், அங்கிருந்து அடுத்த
வெளிச்சம் தெரியும்
இடம். இப்படிச்சென்றால்
மட்டுமே, கும்மிருட்டில்
இருந்து வெளியேறி,
இலக்கை அடைய முடியும்.
எனவேதான், திரைக்கதை
வடிவம் என்பது, மிக மிக
முக்கியமான அம்சமாக
சிட் ஃபீல்டால்
திரும்பத்திரும்ப
வலியுறுத்தப்படுகிறது.
திரைக்கதை வடிவத்தை,
இந்தத் தொடரின்
ஆரம்ப அத்தியாயங்களில்
நாம் பார்த்தது நினைவிருக்கிறதா?
அதன் வடிவத்தை
இங்கேயும் கொடுத்திருக்கிறேன்.
ஒருமுறை இந்த வடிவத்தை
நன்றாகப் பார்த்துக்கொள்ளலாம்.
திரைக்கதை வடிவத்தில் உள்ள
ஒரு பிரச்னை என்னவென்றால்,
இதற்குள் முழுதாக
இறங்கியபின்னால்,
இந்த வடிவம் நமக்குப் புலப்படாத
ஒன்றாக மாறிவிடும்.
அதாவது, இப்படி யோசித்துப்
பாருங்கள்.
இதுவரை சென்றிராத
நீளமான
நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
எங்கு பார்த்தாலும் சாலை,
மேடு, பள்ளம், மரங்கள்,
மலைகள் ஆகியவைதான்
தெரிகின்றன.
கையில் இருக்கும் வரைபடத்தில்
அந்த சாலை இருக்கிறது
என்று தெரியும்.
ஆனால், அதில் நாம்
இருக்கும்போது, இதுதான்
அந்தக் குறிப்பிட்ட இடம் என்பது
நமக்குத் தெரியுமா?
தெரியாது. இதைத்தான்,
திரைக்கதை வடிவத்துக்குள்
நாம் இருக்கும்போது,
அந்த வடிவம் நமக்குப் புலப்படாது
என்று சிட் ஃபீல்ட்
சொல்கிறார்.
அப்படியானால், திரைக்கதை
வடிவத்தைப் பின்பற்றி,
வெற்றிகரமாக ஒரு திரைக்கதையை
நாம் எழுதுவது எப்படி?
கும்மிருட்டில் ஆங்காங்கே
மினுக் மினுக்கென்று
பளிச்சிடும் மிகச்சிறிய
விளக்குகளை எப்படி
உருவாக்குவது?
அந்த விளக்குகளின் பெயர்
தான் Plot Points –
ப்ளாட் பாயிண்ட்ஸ்.
ப்ளாட் பாயிண்ட்ஸ்
என்பதன்
விளக்கத்தை
ஒருமுறை
பார்த்துக்கொள்ளலாம்.
ஏதோ ஒரு சம்பவம் அல்லது
நிகழ்ச்சி, கதையின்
போக்கை திசைதிருப்பி,
வேறொரு பக்கம் பயணிக்கச்
செய்தால்,
அதுவே Plot Point.
இப்போது, திரைக்கதை
வடிவத்தைப் பார்ப்போம்.
ஒரு திரைக்கதையில் பல
ப்ளாட் பாயிண்ட்கள் இருக்கலாம்.
அதில் தவறில்லை. ஆனால்,
அவற்றில் இரண்டு பிரதான
ப்ளாட் பாயிண்ட்களை
நாம் தயாராக வைத்திருக்க
வேண்டும் என்கிறார்
சிட் ஃபீல்ட்.
திரைக்கதையை எழுதத்
தயாராகும்போது, அந்தத்
திரைக்கதையின் ஆரம்பம், முடிவு
மற்றும் இந்தத் திரைக்கதை
வடிவத்தில் உள்ள இரண்டு
ப்ளாட் பாயிண்ட்கள் ஆகியவை
நம்மிடம் தயாராக
இருக்கவேண்டும் என்பது
சிட் ஃபீல்டின் கருத்து.
இந்தப் படத்தில் நாம் பார்க்கும்
ப்ளாட் பாயிண்ட்களின் வேலை
ஒன்றே ஒன்றுதான்:
கதையை நகர்த்துவது.
இந்த இரண்டு ப்ளாட் பாயிண்ட்களும்,
ஒரு வண்டியின் இரண்டு
அச்சாணிகள் போல.
இந்தத் திரைக்கதை
வடிவத்துக்கே அச்சாணிகளாக,
அதனைத் தாங்கி
நிறுத்துவதே இவைகளின்
ஒரே வேலை.
எந்தப் படமாக இருந்தாலும்
சரி – பல்ப் ஃபிக்ஷன் போல
நான் லீனியராகவோ,
கில்லி, விக்ரம், பருத்திவீரன்
போன்ற லீனியர்
( நேர்க்கோட்டில் செல்லக்கூடிய
கதை ) படங்களாகவோ அவை
இருக்கலாம் – படத்தின் கதை,
மேலே படத்தில் உள்ள Beginning
என்ற இடத்தில் துவங்கி,
End என்ற இடத்தில் முடிகிறது.
அப்படி இருக்கக்கூடிய கதை,
இந்த இரண்டு
ப்ளாட் பாயிண்ட்களால்
உறுதிப்படுகிறது. அதுவே
சிட் ஃபீல்ட் அளிக்கும் சூத்திரம்.
சுருக்கமாக, திரைக்கதையில்
முதல் வார்த்தையை எழுதவோ
அல்லது டைப் அடிக்கவோ
நாம் தயாராவதற்கு முன்னர்,
நம்மிடம் இருக்கவேண்டிய
நான்கு
விஷயங்கள் – திரைக்கதையின்
ஆரம்பம், முடிவு மற்றும்
இரண்டு ப்ளாட் பாயிண்ட்கள்.
இவை கையில் இருந்தால்,
திரைக்கதையை எழுதும்போது,
இருட்டில் தடவித்தடவி
நடப்பதற்குப் பதில், நாம் சென்று
சேர வேண்டிய இடத்தை
நோக்கி, அவ்வப்போது
மின்னும் விளக்குகளைத் துணையாகக்கொண்டு,
இறுதியில் இலக்கை எட்டி விடலாம்.
இந்தப் ப்ளாட் பாயிண்ட்களின்
ஒரே நோக்கம் – கதையை
முன்னோக்கி நகர்த்துவதே.
இப்போது, இந்த ப்ளாட் பாயிண்ட்களை
நாம் நன்றாகப் புரிந்துகொள்வதற்காக,
சில உதாரணத்தைக் கொடுக்கிறார்
சிட் ஃபீல்ட்.
முதல் உதாரணம்: Collateral (2004)
கொலாடரல் படத்தின் கதை
மிக எளியது.
அப்படத்தைப் பார்க்காதவர்கள் கூட,
இந்த உதாரணத்தைப்
புரிந்துகொள்ள முடியும்.
டாம் க்ரூஸின் கதாபாத்திரத்தின்
பெயர் – வின்ஸெண்ட். கொலையாளி.
ஒரே இரவில் ஐந்து
பேரைக் கொல்லவேண்டும்
என்பது அவனுடைய
அஸைன்மெண்ட். இதற்காக,
வின்ஸெண்ட் ஏறும் டாக்ஸியின்
ட்ரைவர் பெயர் மாக்ஸ் (Jamie Foxx).
படத்தில், முதலில் வின்ஸெண்ட்
மாக்ஸின் டாக்ஸியில் ஏறும்போது,
நாமும் மாக்ஸ் நினைப்பது
போல்,
வின்ஸெண்ட் ஒரு சாதாரண
பயணி என்றுதான் நினைப்போம்.
முதல் கொலை
நடந்தபின்னர்தான்,
மாக்ஸுக்கு
மெல்லமெல்ல வின்ஸெண்ட்டைப்
பற்றிப் புரிய ஆரம்பிக்கும்.
மாக்ஸுடன் சேர்ந்து நாமும்
படத்தின் கதையைப்
புரிந்துகொள்வது போல
அமைந்திருக்கும் இப்படத்தின்
திரைக்கதை.
படம், மிக சாதாரணமாகவே
துவங்குகிறது.
வின்ஸெண்ட்,
லாஸ் ஏஞ்சலீஸ்
விமானநிலையத்தில்
வந்து இறங்குகிறான்.
யாரோ ஒரு அந்நியனிடம் இருந்து
ஒரு கறுப்புப் பையை வாங்குகிறான்.
காட்சி அங்கே கட் ஆகி,
இரவில் மாக்ஸ் அவனது
டாக்ஸியைத்
துடைத்துக்கொள்வதைப் பார்க்கிறோம். அவனுக்கு அந்த இரவின்
முதல் சவாரி கிடைக்கிறது.
ஆனி என்ற பெண் ( Jada Pinkett Smith.
வில் ஸ்மித்தின் மனைவி ).
இந்த சம்பவம் தான் இப்படத்தின்
Inciting Incident ( இன்ஸைட்டிங் இன்ஸிடெண்ட்டின் வேலை,
படத்துக்குப் படு சுவாரஸ்யமான
ஓப்பனிங் கொடுப்பது ).
படம் துவங்குகையில்,
விமானத்தில் வின்ஸெண்ட்
வந்து இறங்கும் காட்சி,
இன்ஸைட்டிங் இன்ஸிடெண்ட்
அல்ல.
காரணம், வெறுமனே
விமானத்தில் வின்ஸெண்ட்
வந்து இறங்கும் காட்சியால்
திரைக்கதைக்கு தம்பிடி
கூடப் பிரயோஜனமில்லை.
ஆனால், முதல் சவாரியை
மாக்ஸ் பிக்கப் செய்வது படத்திலேயே
மிக முக்கியமான ஒரு நிகழ்வு.
ஏன்? படம் பார்த்தவர்களுக்குப்
புரியும். இதன்பின் என்ன நடக்கிறது?
ஆனியுடன் டாக்ஸியில்
பேசத்துவங்கும் மாக்ஸ்,
அவளின்பால் ஈர்க்கப்படுகிறான். அவளுக்கும் அவனைப்
பிடித்திருக்கிறது. அவளது
அலுவலகத்தில் ஆனியை
விடும்போது, அவள் ஒரு
வக்கீல் என்றும்,
மிக முக்கியமான
ஒரு கேஸில் பணிபுரிந்துகொண்டிருக்கிறாள்
என்றும் மாக்ஸுக்குச்
சொல்லிவிட்டு,
அவளது கார்டையும்
கொடுத்து விடைபெறுகிறாள்.
அதன்பின் வின்ஸெண்ட்
மாக்ஸின் டாக்ஸியில் ஏறுகிறான்.
அவனது ரியல் எஸ்டேட்
வியாபாரத்தில், ஐந்து
நபர்களிடம் கையெழுத்து
வாங்கவேண்டும் என்று
மாக்ஸிடம் சொல்கிறான்.
அப்படி ஐந்து இடங்களுக்குச்
செல்வதற்காக, 600 டாலர்கள்
கொடுப்பதாகச் சொல்ல,
வியாபாரம் ஆரம்பிக்கும்
முடிவில் இருக்கும் மாக்ஸ்,
சம்மதிக்கிறான்.
முதல் முகவரி நோக்கி வண்டி
நகர்கிறது. வின்ஸெண்ட்
இறங்கிச் செல்கிறான்.
சிறிது நேரம் கழிகிறது.
தடால் !
மாக்ஸின் டாக்ஸியின்
முன்பக்கக் கண்ணாடியின்
மீது ஒரு பிணம் மாடியிலிருந்து
விழுகிறது.
வாழ்வின் உச்சபட்ச
அதிர்ச்சியை
அடைகிறான் மாக்ஸ்.
வின்ஸெண்ட் தான் அவனைக்
கொன்றது என்று
அறிந்துகொண்டு, பயத்தின்
எல்லைக்கே செல்கிறான் மாக்ஸ்.
இதுதான் திரைக்கதையின்
முதல் ப்ளாட் பாயிண்ட்.
திரைக்கதையின்
Key Incident ட்டும் இதுதான்
( கீ இன்ஸிடெண்ட்- எந்தக்
காட்சியால் திரைக்கதையின்
போக்கு நமக்குப்
புரிகிறதோ – எந்தக்
காட்சி திரைக்கதையைத்
தாங்கி நிறுத்துகிறதோ,
அதுவே கீ இன்ஸிடெண்ட்.
இன்ஸைட்டிங் இன்ஸிடெண்ட்டால்
பலமான ஓப்பனிங் அமைந்தபின்,
என்ன ஆகிறது என்று
உணர்த்தும் காட்சி.
அதேபோல், பெரும்பாலும்
முதல் ப்ளாட் பாயிண்ட்டும்
கீ இன்ஸிடெண்ட்டும்
ஒன்றாகவே இருக்கும்
என்று
பதிநான்காவது
அத்தியாயத்தில் பார்த்ததையும் நினைவுகொள்ளுங்கள்).
படத்தின் கதை
இந்தச்
சம்பவத்திலிருந்துதான்
ஆரம்பிக்கிறது. ஏனெனில்,
இதன்பின், மேலும் நான்கு
இடங்களுக்கு அந்தக்
கொலையாளியை,
தனக்குப் பிடிக்காமலேயே
மாக்ஸ் கூட்டிச்சென்றாக
வேண்டும். இல்லையெனில்,
தன்னை அவன் கொன்றுவிடுவான்
என்பது மாக்ஸுக்குத் தெரியும்.
ஆக, மாக்ஸின் மனதில்
போராட்டம் ஆரம்பிக்கிறது.
இதுதான் கதையின் ஆரம்பம்.
இதன்பின், வரிசையாக ஒவ்வொரு
நபராக வின்ஸெண்ட்
கொல்கிறான்.
கொலைகளுக்கு மௌன
சாட்சியாக மாக்ஸ்.
ஆரம்பத்தில் பயந்துகொண்டு,
மௌனமாக இருக்கும் மாக்ஸ்,
மெல்ல மெல்ல ரியாக்ட்
செய்ய ஆரம்பிக்கிறான்.
அவனது எமோஷனல் மாறுதலை
இந்தத் திரைக்கதை,
சில சம்பவங்களின் மூலம்
அழுத்தமாக நம்முன் வைக்கிறது.
எப்படி என்றால்,
ஒரு காட்சியில், வின்ஸெண்ட்டின்
கையில் உள்ள ப்ரீஃப்கேஸை,
பாலத்தின் மீதிருந்து
தண்ணீரில் வீசிவிடுகிறான்
மாக்ஸ். இதனால்,
அடுத்து வின்ஸெண்ட்
கொல்லப்போகும் நபர்களைப்
பற்றிய விபரம்
வின்ஸெண்ட்டுக்குக்
கிடைக்காமல் போய்விடுகிறது.
இதனால், வின்ஸெண்ட்,
மாக்ஸையே தனது பாஸிடம்
சென்று விபரங்கள்
வாங்கிவர
நிர்ப்பந்திக்கிறான்.
இப்படி அட்டகாசமான
திருப்பங்கள் ஒவ்வொரு
காட்சியிலும் அடங்கியிருக்கும்
படம் இது.
இதன்பின் என்ன ஆகிறது?
படத்தின் இரண்டாம்
ப்ளாட் பாயிண்ட் என்ன?
மேலும் பல சுவாரஸ்யங்களை
அடுத்த கட்டுரையில்
வெகு விரைவில் காணலாம்….
தொடரும் . . .
கருத்துகள்