திரைக்கதை 12
Chapter 7 – Setting up the Story (contd..)
சென்ற கட்டுரையில் , ‘Chinatown ‘ திரைப்படத்தின்
திரைக்கதையின்
முதல் பத்து பக்கங்கள் படித்தோம்
அல்லவா? இப்போது,
நாம் படித்தவற்றைப் பற்றி
அலசிப் பார்க்கலாம்.
சிட் ஃபீல்ட் எப்படி
அலசியிருக்கிறார் என்பதை
விரிவாகப் பார்க்கலாம்
வாருங்கள்.
முதல் பக்கத்தின் இரண்டாம்
பத்தியிலேயே, பிரதான
கதாபாத்திரமான Jack Gittes அறிமுகப்படுத்தப்படுகிறது.
அப்படியே, அந்தக்
கதாபாத்திரத்தைப் பற்றிய
பல விஷயங்களையும்
நாம் அறிந்துகொள்கிறோம்.
எப்படி?
‘வெளியே நிலவும் சூட்டில்கூட,
லினன் ஸூட் அணிந்திருக்கும்
அந்தப் பாத்திரம்,
கேஷுவலாகவும்
சுறுசுறுப்பாகவும் இருக்கிறது’.
இது முதல் செய்தி. அதேபோல்,
‘தனது கைக்குட்டையால்,
மேஜையில் படிந்திருக்கும்
அழுக்கினைத் துடைக்கிறது’.
இந்தச் செய்தியானது,
அந்தக் கதாபாத்திரம் மிகவும்
கூர்த்த கவனிப்பு உடையது
என்பதை நமக்குத்
தெரியப்படுத்துகிறது.
இந்தத் தகவல் முக்கியமான
ஒன்று. ஏனெனில்,
அந்தக் கதாபாத்திரம்
செய்யும் தொழிலில்
கூர்மையான கவனிப்பு
மிக அவசியம்.
சிறிதுநேரம் கழித்து வெளியே
செல்லும் அந்தப் பாத்திரம்,
மிக நேர்த்தியாக
உடையணிந்திருக்கிறது.
இதுபோன்ற விஷுவல்
தகவல்களால்,
அந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயங்களைப் பற்றி
நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
இதில் எங்குமே அக்கதாபாத்திரம்
எப்படி இருக்கிறது
என்பது சொல்லப்படவில்லை
என்பது சிட் ஃபீல்ட் சொல்லும்
இன்னொரு விஷயம்.
அதாவது, அக்கதாபாத்திரம்
உயரமாக இருக்கிறதா, குள்ளமா,
குண்டாக உள்ளதா ஆகிய
எந்த விஷயங்களும் இல்லை.
அதற்குப் பதில்,
அது எப்படி நடந்துகொள்கிறது
என்பதைச்
சொல்லியே அக்கதாபாத்திரத்தைப்
பற்றிய புரிதலை
நமக்குள் கொண்டுவந்துவிடும்
வகையில் இந்தத்
திரைக்கதை
எழுதப்பட்டிருக்கிறது
என்கிறார் சிட் ஃபீல்ட்.
அதேபோல், Jack Gittes பாத்திரம்,
தன்னைப் பார்க்க
வந்திருக்கும் மனிதனுக்கு,
தன்னிடம் இருப்பதில் மலிவான
விஸ்கி ஒன்றை ஊற்றிக்
கொடுக்கிறது.
இதனால் நாம் புரிந்துகொள்ளும்
செய்தி?
என்னதான் சிறிதளவு சூது
இருப்பினும், பிறரைக் கவரும்
வகையிலும், ஓரளவு பிறர்
மேல் அன்புடனும் இருக்கிறது
அந்தக் கதாபாத்திரம்.
திரைக்கதையின் நான்காவது
பக்கத்தில், Jack Gittes யார் என்ற
செய்தி, விஷுவலாகக்
காட்டப்படுகிறது – ‘ கண்ணாடியின்
மேல், J.J. GITTES and Associates—DISCREET INVESTIGATION என்ற
வார்த்தை
எழுதப்பட்டிருக்கிறது’ – என்ற
வாக்கியத்தின் மூலம்.
திரைக்கதையின் முக்கியமான
சம்பவம், பக்கம் ஐந்தில்
சொல்லப்படுகிறது.
அங்கேதான் மிஸஸ் மல்ரே
என்ற பெண்மணி, ஜாக்கிடம் வந்து,
தனது கணவருக்கு ஒரு
கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்படுவதாகவும்,
அதனை ஜாக் துப்பறியவேண்டும்
என்றும் வேண்டுகோள்
விடுக்கிறாள்.
அதிலிருந்துதான் கதை
ஆரம்பிக்கிறது.
அந்த நிகழ்ச்சியால்தான்
திரைக்கதையின் முதல்
plot point நிகழ்கிறது
( திரைக்கதையின் முப்பது
நிமிடங்களில் நிகழும் இந்த
முதலாவது ப்ளாட் பாயின்ட்
என்னவெனில், நிஜமான
மிஸஸ் மல்ரேவை
ஜாக் சந்திப்பதே.
அப்போதுதான்,
ஒரு மிகப்பெரிய
சதிச்சுழலில் சிக்கிக்கொண்டிருப்பதை
ஜாக் உணர்கிறான்.
அதிலிருந்து மீள்வதற்காக
ஜாக் செய்யும் விஷயங்களே
மீதிக்கதை ).
“என் கணவருக்கு வேறொரு
பெண்ணுடன் தொடர்பு
இருப்பதாகச் சந்தேகப்படுகிறேன்”
என்ற வார்த்தைகளே
சைனாடௌன் திரைக்கதை
செல்லும்
போக்கினைத் தீர்மானிக்கின்றன.
அதனால்தான் அப்பெண்ணின்
கணவரை ஜாக்
பின்தொடர்கிறான்.
அப்படித் தொடர்வதால்தான்
அந்த நகரில் நடைபெறும்
மாபெரும் தண்ணீர்
சம்மந்தப்பட்ட
ஊழலைக் கண்டுபிடிக்கிறான். அதனால்தான் அப்பெண்ணின்
கணவர் கொலை
செய்யப்படுவதையும்
கண்டுபிடிக்கிறான்.
இத்தனைக்குப் பிறகு,
நிஜமான பெண்மணியை
ஜாக் சந்திக்க நேர்கிறது.
அப்போது, தன் கணவரைத்
தொடர்ந்த குற்றத்துக்காக
ஜாக்கின்மேல் போலீஸில்
புகார் கொடுக்கப்போவதாகக்
கூற, சிக்கலில் மாட்டிக்கொண்ட
ஜாக், யாரோ ஒரு பெண்ணினால்
அவன் ஏமாற்றப்பட்டதைப் புரிந்துகொள்கிறான்.
இயல்பிலேயே கர்வியான
அவனால் அதனைத்
தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அதனால்தான் உண்மையைக் கண்டுபிடிப்பதில் மிகத் தீவிரமாக இறங்குகிறான்.
இப்படி ஒரு சரடில்
கோர்க்கப்பட்ட சம்பவங்களாக
இவை ஒன்றின் பின்
ஒன்றாகத் தொடர்வதும்,
ஒவ்வொரு சம்பவத்துக்குமே
முன்னர் நடந்த இன்னொரு
சம்பவத்துடன் தொடர்பு
இருப்பதுமே இத்திரைக்கதையை
மிகச்
சுவாரஸ்யமுடையதாகக்
காட்டுகின்றன என்கிறார்
சிட் ஃபீல்ட்.
இந்தத் திரைப்படத்தின் மைய
இழையாக வரும் ஊழல்,
உண்மையில் 1900ல் லாஸ்
ஏஞ்சலீஸில் நடந்த உண்மைச்
சம்பவம். அந்தச் சம்பவத்தை
மட்டும் எடுத்துக்கொண்டு,
1937ல் கலிஃபோர்னியாவில்
நிகழ்வதாக எழுதப்பட்டிருக்கிறது இத்திரைக்கதை.
ஆக, இந்தத் திரைக்கதையின்
முதல் பத்து பக்கங்களுக்குள்ளேயே
பிரதான கதாபாத்திர
அறிமுகம்,
திரைக்கதை செல்லப்போகும்
பாதை, திரைக்கதையின் கரு
ஆகிய அத்தனையுமே
தெளிவாக எழுதப்பட்டிருப்பதைப்போல்தான்
நாமும் நமது திரைக்கதைகளை
எழுத முயல வேண்டும்
என்று சொல்கிறார்
சிட் ஃபீல்ட்.
இத்துடன் சிட் ஃபீல்டின்
புத்தகத்தின் ஏழாவது
அத்தியாயமான ‘Setting up the story’ முடிவடைகிறது.
அடுத்த அத்தியாயத்தில்,
திரைக்கதைக்கு அவசியமான
இரண்டு சம்பவங்களைப்
பற்றிப் பார்க்கப்போகிறோம்.
அவை…..?
தொடரும் . . .
கருத்துகள்