திரைக்கதை 11
சென்ற கட்டுரையில்,
சிட் ஃபீல்டின் புத்தகத்தின் ஆறாவது
அத்தியாயமான Endings and
Beginnings பற்றிப் பார்த்தோம்.
இப்போது, ஏழாம்
அத்தியாயம் ஆரம்பிக்கிறது.
Chapter 7: Setting up the Story
நியூட்டனின் மூன்றாம் விதியைப்
பற்றிப் பேசி, இந்த
அத்தியாயத்தை ஆரம்பிக்கிறார்
சிட் ஃபீல்ட். ‘Every action has
an equal and opposite reaction’
என்ற அந்த மூன்றாம் விதி, திரைக்கதையிலும் மிக
முக்கியமான ஒன்று என்கிறார்
சிட் ஃபீல்ட்.
அதாவது, திரைக்கதையில்
எழுதப்பட்டிருக்கும்
அத்தனையுமே ஒன்றோடொன்று
தொடர்பு உடையவை. ஆகையால்,
பத்தாம் பக்கத்தில் உள்ள
ஒரு வசனத்தையோ அல்லது
ஒரு காட்சியையோ மாற்றினால்,
எண்பதாம் பக்கத்தின் காட்சியோ
வசனமோ கட்டாயம் பாதிக்கப்படும்
என்பது அவரது கூற்று.
அதேபோல், திரைக்கதையின்
இறுதியை மாற்றினால்,
அதைப்பொறுத்து,
திரைக்கதையின் தொடக்கத்தையும்
மாற்ற வேண்டியிருக்கும்
என்கிறார் அவர்.
திரைக்கதை என்பது, முழுமையான
ஒன்று. இந்த முழுமையான
விஷயம், அதன் பகுதிகளான
சிறு சிறு விஷயங்களால்
கோர்க்கப்பட்டு உள்ளது. ஆகவே,
இந்த சிறிய விஷயங்களான
காட்சிகள், வசனங்கள்
ஆகியவை எங்காவது
மாற்றப்பட்டால், அது,
முழுமையான வடிவமாக
அமைந்துள்ள திரைக்கதையையும்
கட்டாயம் மாற்றும்.
ஒரு உதாரணம்:
ஒரு கட்டிடத்தை
எடுத்துக்கொள்வோம்.
செங்கல், சிமென்ட்,
கம்பிகள்
ஆகியவையால் ஒன்று
சேர்க்கப்பட்ட வடிவமே
ஒரு கட்டிடம் ஆகிறது.
இந்தக் கட்டிடத்தின் தரைத்தளத்தில்
உள்ள செங்கல்கள்,
சிமென்ட் ஆகியவைகளை
சற்றே மாற்றினால், அந்தக்
கட்டிடத்தின் முழு வடிவம்
சற்றேனும் மாறுகிறது அல்லவா?
அதைப்போல்தான் திரைக்கதையும்,
அதன் பகுதிகளான வசனங்கள்,
காட்சிகள் ஆகியவைகள்
எங்காவது மாற்றப்பட்டால்,
அதன் விளைவுகள் வேறு
ஏதாவது ஒரு இடத்தை பாதிப்பதில்
வந்து முடிகிறது.
ஆகவே, திரைக்கதையின் முதல்
பக்கத்தில் இருந்தே நமது
கதையை ஆரம்பித்துவிட
வேண்டும்.
திரைக்கதையைப் படிக்கும்
எவருக்கும், கதையில் என்ன
நடக்கிறது என்பது முதல்
பக்கத்தில் இருந்தே தெரிவாகப்
புரிய வேண்டும். கதையை
வசனங்களின் மூலமாக
நகர்த்துவது, சுவாரஸ்யத்தைக்
கட்டாயம் குறைக்கும். திரைக்கதை
என்பது, காட்சிகளால் சொல்லப்படும்
கதை என்பதை மறந்துவிட
வேண்டாம்.
ஆகவே, காட்சிகளாலேயே
கதை சொல்லப்படல் வேண்டும்.
கதையின் பிரதான கதாபாத்திரங்கள்
யார், கதையின் கரு எது,
எதனை நோக்கிக் கதை நகர்கிறது
ஆகிய விஷயங்கள், திரைக்கதையின்
முதல் பத்து பக்கங்களில் –
அதாவது, திரைப்படத்தின்
முதல் பத்து
நிமிடங்களில் – தெளிவாக சொல்லப்பட்டுவிடுதல்
வேண்டும்.
கதையை ஒரு action
சீக்வென்ஸிலோ ( விக்ரம்,
காக்க காக்க, பருத்தி வீரன், LOTR, Terminator 2. ) அல்லது
ஒரு உணர்ச்சிபூர்வமான
சீக்வென்ஸிலோ ( முதல் மரியாதை, Shawshank Redemption,
ஆரண்ய காண்டம் )
ஆரம்பிக்கலாம்.
அல்லது அது ஒரு நகைச்சுவைக்
கட்சியில் கூடத் தொடங்கக்கூடும்.
அது, உங்களது கற்பனையைப்
பொறுத்தது. ஆனால்,
அப்படித் துவக்கப்படும் காட்சி,
கதைக்கு முக்கியமானதாக இருக்கவேண்டும்.
கதைக்கே சம்மந்தம் இல்லாத
காமெடி அல்லது ஜஸ்ட் லைக் தட்
ஒரு எக்ஸ்ட்ரா காட்சியாக
இருக்கக்கூடாது.
சரி. இப்போது, திரைக்கதை
எழுதுவதில் தீவிரமாக இறங்கும்
காலகட்டம் வந்துவிட்டது.
இதுவரை நாம் படித்த
அத்தனை
விஷயங்களையும்
நடைமுறையில் வெளிப்படுத்தும்
நேரம் வந்தே விட்டது.
திரைக்கதை எழுதத்
துவங்குமுன், உதாரணமாக
நாம் புரிந்துகொள்ள ஒரு
‘மாடல்’ திரைக்கதை
வேண்டுமல்லவா?
இப்படி ஒரு உதாரணத்
திரைக்கதையைப் படித்தால்,
அது நமக்குத் திரைக்கதை
வடிவத்தைப் புரிந்துகொள்ள
உதவியாக இருக்கும்.
அதைப் படித்துப் பார்த்தபின்,
சுயமாகத் திரைக்கதையை
எழுதத் துவங்கலாம்.
அப்படி ஒரு மாடல் திரைக்கதை,
தமிழில் வெளிவந்திருக்கிறதா?
இங்குதான் நமக்கு ஏமாற்றம்
பரிசாகக் கிடைக்கிறது.
தமிழில் இதுவரை
புத்தகமாக வெளிவந்திருக்கும் திரைக்கதைகள் மிகக் குறைவு.
விரல் விட்டு எண்ணிவிடலாம்.
அப்படி வெளிவந்திருக்கும் திரைக்கதைகளோ,
திரைக்கதை வடிவம்
எப்படி இருக்கக்கூடாதோ
அதற்கே உதாரணமாக
இருக்கின்றன.
ஆகவே, இந்தத்
திரைக்கதைகளை
உதாரணமாக
எடுத்துக்கொள்வது,
தற்கொலை செய்துகொள்வதற்குச்
சமம். இதை நான் சொல்லும்
காரணம் மிக எளிது.
திரைக்கதை வடிவத்தை
இம்மி பிசகாமல்
பின்பற்றி எழுதப்பட்டாலும்,
கதையில் வலு
இருக்கவேண்டும்.
ஆரம்பம், ப்ளாட் பாயின்ட் 1,
ப்ளாட் பாயின்ட் 2, முடிவு என்ற
வகையில் மிகச்சரியாக
120 பக்கங்கள் எழுதப்பட்டால் கூட,
கதை இஷ்டத்துக்கு நம்மை
வதைத்தால், அது உதாரணத்
திரைக்கதை ஆகிவிடாது.
ஆனால், இதைத்தான்
பெரும்பாலும் தமிழ்ப்படங்கள் பின்பற்றுவதால்,
இதைப்போன்ற திரைக்கதைகளை உதாரணமாக
எடுத்துக்கொண்டால்,
தலையைப் பிய்த்துக்கொள்ளும்
நிலை ஏற்பட்டுவிடும்.
ஆகவே, உதாரணத்
திரைக்கதை வேண்டுவோர்,
பருத்தி வீரன் படத்தைப்
படித்துக் கொள்ளுங்கள்.
இதுவரை வெளியான தமிழ்
திரைக்கதை வடிவங்களில்,
பருத்திவீரன், இருப்பதிலேயே
நல்லதாக எனக்குத் தோன்றுகிறது.
தமிழ் வேண்டாம்;
ஆங்கிலத்திலேயே உதாரணம்
கொடுத்தால் கூட
அதனைப் படித்துக்கொள்ள
முடியும் என்று சொல்லும் நண்பர்கள்,
இதோ இந்தத் திரைக்கதையின்
முதல் பத்து பக்கங்களை
இங்கேயே படித்துக்கொள்ளலாம்.
இதுதான் ஒரு நல்ல திரைக்கதைக்கு
சிட் ஃபீல்ட் கொடுக்கும் உதாரணம். தூக்கத்தில் இருந்து எழுப்பி
அவரைக் கேட்டால் கூட,
இந்தத் திரைக்கதையைத்தான்
அவர் உதாரணமாக
சொல்லுவார்.
அப்படிப்பட்ட உதாரணத் திரைக்கதை
எந்தப் படத்தினுடையது?
ChinaTown
ஏன் சைனாடௌன்?
காரணமாக சிட் பீல்ட் சொல்வது,
வேறு எந்தப் படத்தையும்
விட, சைனாடௌன் படத்தில்,
அத்தனை விஷயங்களும்
மிகச்சரியாக
வைக்கப்பட்டிருக்கின்றன
என்பதையே. கதை,
கதாபாத்திரங்கள், காட்சிகள்,
வசனங்கள் ஆகிய
அத்தனையும், ஒன்றையொன்று
சரியான விகிதத்தில்
ஆதரிக்கின்றன.
விளைவாக நமக்குக்
கிடைப்பதோ, அட்டகாசமானதொரு திரைக்கதை வடிவம்.
http://online.fliphtml5.com/vxfx/fzrd/#p=2
இதோ இங்கே
சைனாடௌன்
திரைக்கதையைத்
தரவிறக்கிக்கொள்ள முடியும்.
அதன் முதல் பத்து பக்கங்களை
மட்டும் படித்துப்பாருங்கள்.
அதில் உள்ள வேறு எந்த
விஷயத்தைப் பற்றியும் கவலைப்படவேண்டாம்.
அதிலுள்ள தொழில்நுட்ப
விஷயங்களை விரிவாகவே
பின்னால் வரும்
கட்டுரைகளில் பார்க்கப்போகிறோம் என்பதால், திரைக்கதையின்
முதல் பத்து பக்கங்களை மட்டும்
படியுங்கள்.
மிக எளிதான ஆங்கிலமாகவே
இது இருப்பதால், படிக்கும்
நண்பர்களுக்குப் பிரச்னை
வராது என்று நம்புகிறேன்.
ஒருவேளை ஒன்றுமே
புரியாவிட்டாலும் பரவாயில்லை;
ஒரே ஒரு முறை
படித்துப்பாருங்கள்.
இந்த முழுத் திரைக்கதையில்,
முதல் பத்து பக்கங்கள் என்பது,
இடது பக்கத்தில் 1, 2
என்று எண்ணிக்கைகள்
இடப்பட்டிருப்பதில் 20 என்ற
இடம் வரை. அதுவரை
படித்தால் போதுமானது.
இதுவரை இந்தத் தொடரைப்
படிக்கும் நண்பர்களுக்கு,
இது முதல் ஹோம் வொர்க்.
ஆகவே, தவறாமல் இந்தப்
பக்கங்களைப் படித்துவிட்டு
வாருங்கள்.
அடுத்த கட்டுரையில் விவாதிப்போம்.
தொடரும் . . .
பி . கு நண்பர்களே
ஒரே ஒரு விஷயத்தை
மறக்காமல் நினைவுவைத்துக்கொள்ளுங்கள்.
சிறிய அளவு உழைப்பு கூட
இல்லாமல்,
எந்த விஷயத்தையும்
வெற்றிகரமாக நிறைவேற்றுதல்
இயலாத காரியம். ஆகவே,
திரைக்கதை எழுத உங்களால்
ஆன உழைப்பு,
ஒரு ‘மாடல்’ திரைக்கதையின்
முதல் பத்தே பத்து பக்கங்களைப்
படிப்பது.
ஆகவே, அதைச் செய்வீர்கள்
என்று நம்புகிறேன். எதுவுமே
செய்யாமல் ஒரு கலைவடிவம்
நமக்குக் கைகூடிவிடாது
என்பதை மறந்துவிடவேண்டாம்
என்று கேட்டுக்கொள்கிறேன்.
கருத்துகள்