திரைக்கதை 07
சென்ற அத்தியாயத்தில்,
ஒரு கதாபாத்திரத்தை
எப்படி வலுவுள்ளதாக
ஆக்குவது
( கதாபாத்திரத்தின்
பல்வேறு இன்றியமையாத
அம்சங்கள் ) என்று பார்த்தோம்.
இனி, இந்தக் கட்டுரையில்,
கதைக்கும் கதாபாத்திரத்துக்கும்
உள்ள தொடர்பை விரிவாகப்
பார்ப்போம்.
Chapter 5 : Story and Character
திரைக்கதை எழுதுவதில்,
இரண்டே இரண்டு முறைகள்
தான் உள்ளன. ஒன்று,
ஒரு ஐடியாவை உருவாக்கிவிட்டு,
அதை டெவலப்
செய்து, கதாபாத்திரங்களை
அந்தச் சம்பவங்களுக்குள் வைப்பது.
பெரும் பிரச்னையிலிருந்து
ஒரு பெண்ணைக் காப்பாற்றும்
இளைஞன் – கில்லி;
கிராமத்திலிருந்து பெரும்
கனவோடு வியாபாரம் செய்ய
வரும் மனிதன் – குரு;
திருடப்பட்ட ராக்கெட்டைத்
தேடிச்செல்லும் உளவாளி – விக்ரம்;
சாதாரண பாக்ஸர் ஒருவன்,
உலகின் ஹெவிவெய்ட்
சாம்பியனோடு மோதும்
சூழ்நிலை – Rocky;
எத்தகைய நிலையிலும்
நம்பிக்கையை இழக்காத
மனிதன் ஒருவனின்
கதை – Shawshank Redemption.
இவற்றைப்போல்
ஐடியாக்களை உருவாக்கிவிட்டு,
இந்த ஐடியாக்களை
விரிவாக்கும்போருட்டு
கதாபாத்திரங்களை உருவாக்குதல்
முதல் வகை.
இரண்டாவது முறை –
ஒரு கதாபாத்திரத்தை
முதலில் உருவாக்கிவிட்டு,
அதன்பின் அந்தக்
கதாபாத்திரத்துக்கேற்ற வகையில்
ஒரு ஐடியாவை உருவாக்கி,
கதையை விரிவாக்குவது. நம்மூரில்
பெரிய ஸ்டார்களை முதலில்
புக் செய்துவிட்டு,
நான்கு ஃபைட்கள்,
இரண்டு குத்துப்பாட்டுகள்,
ஒரு இன்ட்ரோ பாடல்,
வில்லன், அம்மா
செண்டிமெண்ட்
இத்யாதியெல்லாம் யோசிக்கப்பட்டு
ஒரு திரைப்படம் உருவாவதைப்
பற்றிச் சொல்லவில்லை.
எந்தத் திரைக்கதை
அமைப்புக்குள்ளும் வராத
‘விசேட’ திரைப்படங்கள் இவை.
சிட் ஃபீல்ட் சொல்லவருவது,
ஒரு இயல்பான கதாபாத்திரத்தை
முதலில் உருவாக்கிக்கொள்ள
வேண்டும். அதன்பின்
அந்தக் கதாபாத்திரத்துக்கு என்ன
தேவை என்பது முடிவு
செய்துகொள்ளப்பட வேண்டும்.
அதன்பின் அந்தத் தேவையைச்
சுற்றிக் கதை பின்னப்பட
வேண்டும். இதுவே இரண்டாவது
வகை.
இந்த அத்தியாயத்தில், தனது
திரைப்பட workshopகளில்
சிட் ஃபீல்ட் கையாளும் முறையைப்
பற்றிப் படிக்க இருக்கிறோம்.
அதாவது, கதாபாத்திரத்தை
எப்படி உருவாக்குவது?
அப்படி உருவாக்கிய
கதாபாத்திரத்துக்கு எப்படி ஒரு
கதையைக் கண்டுபிடிப்பது என்பது.
இதைப் படிக்கும்
நண்பர்களுக்கு நினைவிருந்தால்,
இரண்டு கட்டுரைகளுக்கு
முன்பு, திரைக்கதை – 5 ல்,
பின்னூட்டத்தில், இளங்கன்று
என்ற நண்பர்,
திரைக்கதைக்காகக் கதாபாத்திரமா
அல்லது கதாபாத்திரத்துக்காகத் திரைக்கதையா என்ற
ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்.
அதில், இரண்டுமே சாத்தியம்
என்று நான் பதில்
சொல்லியிருந்தேன்.
இது வரை நாம் பார்த்துவந்தது, திரைக்கதைக்காகக் கதாபாத்திரத்தை உருவாக்குதல்.
ஆனால், இப்போது நாம் பார்க்க
இருப்பது, கதாபாத்திரத்தை
முதலில் உருவாக்கிவிட்டு,
அதைச்சுற்றித் திரைக்கதையை
அமைத்தல். இப்போது,
இனிவரும் பகுதியை, சிட் ஃபீல்ட்
பேசுவதாக எண்ணிக்கொள்ளுங்கள்.
Workshop துவங்குகிறது.
திரைக்கதை எழுதிப்பழக
ஆர்வமுடன் பல்வேறு மனிதர்கள்
அங்கே அமர்ந்திருக்கிறார்கள்.
“கதாபாத்திரம் ஒன்றை
உருவாக்குவோம் வாருங்கள்”
என்கிறேன் நான். “உங்களிடம்
சில கேள்விகளை நான் கேட்பேன்.
நீங்கள் அவற்றுக்குப்
பதில் சொல்லவேண்டும்.
சரியா?”
அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர்.
“ஒகே. எப்படி ஆரம்பிக்கலாம்?
எங்கு ஆரம்பிக்கலாம்? ”
“சென்னை” – அறையின்
கடைசியில் இருந்து ஒரு குரல்
கேட்கிறது.
“சென்னை?”
“ஆம். கதாநாயகன்
சென்னையைச் சேர்ந்தவன்” – முதலில்
குரல் எழுப்பிய அதே நபர்.
இப்போது, அங்கே இருக்கும்
பெண்கள் அனைவரும்
சேர்ந்து கத்துகின்றனர். “இல்லை
இல்லை .
அவள் சென்னையைச் சேர்ந்தவள்”
“ரைட். ஒரு பெண்
கதாபாத்திரத்தை எடுத்துக்கொள்ளலாம்” என்கிறேன் நான். அனைவருக்கும்
அது பிடித்திருக்கிறதா என்றும்
கேட்கிறேன். அனைவரும்
சம்மதிக்கின்றனர்.
“சரி. நமது கதாபாத்திரம்,
சென்னையைச் சேர்ந்தவள். இதிலிருந்துதான் நாம் ஆரம்பிக்கப்போகிறோம்”.
“அவளுக்கு என்ன வயது?
” – இது என் கேள்வி.
” இருபது? ” – பலரும்
சேர்ந்து பதிலளிக்கின்றனர்.
இல்லை. இருபத்து ஐந்திற்கு
மேல் வைத்துக்கொள்ளலாம்
என்று நான் சொல்கிறேன். ஏன்?
ஒரு திரைக்கதையை நீங்கள்
எழுதும்போது, ஏதாவது
ஒரு பிரபல
நட்சத்திரத்துக்காகவே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்
என்பதை மறவாதீர்கள்.
ஆகவே, தற்போது நமது
திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பிரபல ஹீரோயின்கள் அனைவருமே,
அந்த வயதில் அல்லது அதற்கு
மேல் தான் இருக்கிறார்கள்
அல்லவா? த்ரிஷா, ஸ்நேஹா,
ரீமா சென், அஞ்சலி, ஆண்ட்ரியா
போன்ற நட்சத்திரங்களை
உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.
புதிய ஹீரோயின்களை
விட்டுவிடுவோம். ஏனெனில்,
இது வழக்கமான ஜாலி
ஹீரோயின் சப்ஜெக்ட் அல்ல.
ஹீரோயின் ஓரியண்டட் திரைக்கதையாகவே இது இருக்கப்போகிறது. ஆகவே,
ஓரளவு நன்றாக நடிக்கக்கூடிய கதாபாத்திரங்களை
எடுத்துக்கொண்டால்,
அனைவரும் இருபத்து ஆறு
அல்லது இருபத்து ஏழு வயதில் இருக்கிறார்கள்.
எனவே, இந்த வயது
வரம்பை எடுத்துக்கொள்வோம்.
அனைவரும் மறுபடி
ஒப்புக்கொள்கின்றனர்.
“சரி. கதாபாத்திரத்தின்
பெயர் என்ன?”
ஒரு பெண், ‘அஞ்சலி’ என்று
கத்த, அனைவரும்
ஆமோதிக்கின்றனர்.
இப்படியாக, சென்னையைச்
சேர்ந்த அஞ்சலி என்ற,
இருபத்தி ஆறு வயதுப்பெண்,
நமது திரைக்கதையின்
பிரதான கதாபாத்திரமாக உருவாக்கப்படுகிறாள்.
கதாபாத்திரத்தை
உருவாக்கியாயிற்று.
அடுத்து, கதாபாத்திரத்தின்
விபரங்கள்.
“கதாபாத்திரத்தின் பெற்றோரை
இப்போது உருவாக்குவோம்”
என்கிறேன். “அஞ்சலியின்
தந்தை யார்? ”
அவர் ஒரு மருத்துவர்
என்று முடிவு செய்கிறோம்.
அவளது தாயார்? மருத்துவரின்
மனைவி. வீட்டிலேயே
இருக்கக்கூடியவர்.
“அஞ்சலியின் தந்தை
பெயர் என்ன?”
மயில்சாமி. சரி. அவரது
பின்புலம் என்ன?
சிறிது நேர விவாதத்துக்குப்
பிறகு, மயில்சாமியைப் பற்றி
இப்படியாக முடிவு
செய்யப்படுகிறது:
சென்னையின் பணக்கார
வர்க்கத்தைச் சேர்ந்தவர்
மயில்சாமி. செல்வந்தர்.
கலாச்சாரத்தில் ஈடுபாடு
உள்ளவர். புத்திசாலி.
கோவையில் மருத்துவம்
படித்துவிட்டு, சென்னையின்
பிரபல மருத்துவமனையில்
ப்ராக்டீஸ் செய்துகொண்டிருப்பவர்.
“சரி. திருமணத்துக்கு முன்னர்
அஞ்சலியின் தாயார்
என்ன செய்துகொண்டிருந்தார்?”
‘டீச்சர் – அவரது பெயர் லீலா”
“ஒகே”. கோவையில் டீச்சராக
இருந்த லீலா, அங்கே
மருத்துவம் படிக்கவந்த
மயில்சாமியுடன் பழக நேர்கிறது.
மருத்துவப் படிப்பை
மயில்சாமி படித்துமுடிக்கும் வரை
டீச்சராக கோவையில்
இருக்கிறார் லீலா.
இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப்போக, திருமணம்.
அதன்பின் மயில்சாமி சென்னை
வர, வேலையை ராஜினாமா
செய்துவிட்டு லீலாவும்
சென்னை வந்துவிடுகிறார்.
ஏனெனில், பிறக்கப்போகும்
குழந்தைக்காக. இப்படி
முடிவு செய்யப்படுகிறது.
“அஞ்சலியின் பெற்றோர்கள்
எப்போது திருமணம்
செய்துகொண்டனர்?
” – இது என் கேள்வி.
அஞ்சலிக்குத் தற்போது
இருபத்தி ஆறு வயது என்றால்,
அவர்கள் திருமணம்
செய்துகொண்டு கிட்டத்தட்ட
27 -28 வருடங்கள் ஆகிவிட்டன.
அதாவது, 1983 அல்லது 1984 ல்
திருமணம் நடந்திருக்கிறது.
1985 ல் அஞ்சலி
பிறந்ததாக எடுத்துக்கொள்வோம்.
1985 ஃபெப்ருவரியில் பிறந்திருக்கிறாள்.
“அஞ்சலியின் பெற்றோர்களுக்கு
இடையே எப்படிப்பட்ட உறவு
நிலவுகிறது? ”
சராசரியான உறவு. ஒன்றும்
பெரிய ஈர்ப்பு எதுவும்
தற்போது இல்லை.
“அஞ்சலிக்கு சகோதர
சகோதரிகள் யாரேனும்
இருக்கின்றனரா?” – இல்லை.
அஞ்சலி ஒரே பெண் என்று
முடிவு செய்யப்படுகிறது.
“எப்படிப்பட்ட குழந்தைப்பருவத்தை
அஞ்சலி அனுபவித்தாள்?”
தனிமை. சிறுவயதில்,
தன்னுடன் விளையாட யாரேனும்
தம்பி தங்கைகள் வேண்டும்
என்று எதிர்பார்த்தாள் அஞ்சலி.
அப்படி யாரும் இல்லாததால்,
எப்பொழுதுமே தனிமையில்
கழித்தாள். மெதுவாக, தனது தாயிடம்
நட்பு பாராட்ட ஆரம்பித்தாள்.
அவளது டீன் ஏஜ் வரை அது
தொடர்ந்தது. அதன்பின்
வழக்கமான பெற்றோர் – மகள்
பிரச்னைகள்.
“அஞ்சலிக்கும் அவளது
தந்தைக்கும் எப்படிப்பட்ட
உறவுமுறை இருந்தது?”
ஓரளவு நன்றாகவே இருந்தது.
அஞ்சலியின் தந்தை,
ஒரு மகனை விரும்பியிருக்கலாம்.
அதனால், அஞ்சலி, ஒரு மகனைப்
போலவே தந்தையால்
வளர்க்கப்பட்டாள். ஆகவே,
தந்தையின் அன்புக்கு தனக்குக்
கிடைக்கும் வழிகளை எப்போதும்
அவள் எண்ணி வந்தாள்.
தந்தை விரும்பிய
மகனைப்போல் மாறிவிட்டால்,
அவரது அன்பு எப்போதும்
கிடைக்கும். ஆனால்,
இந்தக் காரணத்தாலேயே,
சிறுகச்சிறுக அவளது
தாயின் கோபத்துக்கும் அவள்
ஆளாகிறாள். இந்த விஷயம்,
கதையில் பிற்பாடு ஆண்களுடன்
அஞ்சலி பழகும்
முறையைத் தீர்மானிக்கிறது.
இந்தப் பிரச்னைகள் எதற்கு?
கதையில் தடைகள் இருந்தால்தான் திரைக்கதை சுவையாக இருக்கும்
என்று முன்னர்
பார்த்தோமல்லவா?
அதற்காகத்தான்.
இந்த இடத்தில்,
சிட் ஃபீல்ட், கதாபாத்திரத்தின்
தன்மைகள் குறித்துப் பேசுகிறார்.
அதாவது, பல பெண்கள்,
தாங்கள் சந்திக்கும் ஆண்களில்,
தங்களது தந்தையைத்
தேடுகின்றனர். அதேபோல்,
ஆண்கள், பெண்களிடம், தங்களது
தாயைத் தேடுகின்றனர்.
இது உளவியல் சொல்லும்
உண்மை. இதுபோன்ற
சின்னச்சின்ன விஷயங்களை, கதாபாத்திரத்தின் ஒரு கூறாக
வைத்தால்,
அது திரைக்கதையைக்
கொஞ்சம் ஸ்வாரஸ்யமாக்கும்.
உதாரணத்துக்கு, திரைக்கதையில்
அஞ்சலி சந்திக்கப்போகும்
ஒரு மனிதர், அவளது தந்தையைப்
போல் அவளுக்குத் தோன்றலாம்.
அதனால் அவர்
சொல்லுவதையெல்லாம் நம்பி,
அவரது அன்புக்குப் பாத்திரமாக
வேண்டும் என்று
அஞ்சலிக்குத் தோன்றலாம்.
அதனால் ஏதாவது சிக்கல் நேரலாம்.
இப்படி. அதேபோல், அஞ்சலியின்
தாயார், சமுதாயத்தின் ஆண்களைப்
பற்றி அஞ்சலியை
எச்சரித்திருக்கலாம்.
அதனாலேயே அஞ்சலி
ஆண்களைக் கண்டு
எச்சரிக்கையாக இருந்திருக்கலாம்.
எது உங்களுக்குச் சரி என்று
படுகிறதோ, அதனை
திரைக்கதையில் எழுதுங்கள்.
“அஞ்சலியின் பள்ளிப் பருவம்
எப்படிக் கழிந்தது?”
சுறுசுறுப்பாக. துடிப்பாக.
அஞ்சலி அனைவருடமும்
பழகக்கூடியவளாக இருந்தாள்.
படிப்பிலும், அதிகம்
முயற்சிக்காமலேயே
சிறப்பாக விளங்கினாள்.
அவளுக்குப் பல நண்பர்கள்
இருந்தனர். பள்ளி, தன்மீது
விதிக்கும் பல விதிகளை உடைக்கக்கூடியவளாகவே,
ஒரு புரட்சிகரமான
சிந்தனையோடு இருந்தாள்.
சுருக்கமாக – அஞ்சலி ஒரு
அராத்து. அவளது பெற்றோர்கள்,
இது தெரிந்திருந்தும்,
பொறுமையாக – ஆனால் தகுந்த
புரிதல் இல்லாமல், அவளைக்
கவனித்து வந்தனர்.
வட இந்தியாவின் புகழ்பெற்ற
ஒரு கல்லூரியில், அரசியல்
படிக்க அஞ்சலி முடிவு
செய்கிறாள். தன்னைச்சுற்றி
இருக்கும் சமூகத்தை மாற்ற
வேண்டும் என்ற துடிப்பு
அவளுக்குள் இருக்கிறது.
ஆகவே, தன தாயார் எதிர்ப்பையும்
மீறி, அரசியல் படிக்க முடிவு
செய்கிறாள்.
அவளது புரட்சிகரமான
செயல்பாடு, கூர்மையான
நோக்கு, உறுதியான
எண்ணங்கள் ஆகியன,
அவளது கதாபாத்திரத்தின் தனித்தன்மைகளாக
விளங்குகின்றன. இப்படியாக,
அரசியல் படிப்பை முடித்து,
சென்னை திரும்புகிறாள்
அஞ்சலி. கல்லூரியில் படிக்கும்போது
சக மாணவன்
ஒருவனையும் காதலிக்கிறாள்.
அடுத்தது என்ன?
சென்னை திரும்பிய அஞ்சலி,
தில்லிக்குச் சென்று வேலை
செய்ய விரும்புகிறாள்.
அவள் படித்த அரசியல்
படிப்புக்குத் தில்லியில் சரியான
தீனி கிடைக்கும் என்பது அவளது
எண்ணம். மயில்சாமி இதனை
ஏற்கிறார். ஆனால்,
தாயார் லீலா ஒப்புக்கொள்வதில்லை. லீலாவுக்கு, அஞ்சலி ஒரு
சராசரியான தமிழ்ப்பெண்ணாக,
படித்து முடித்தவுடன்
திருமணம் செய்துகொண்டு
குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதே எண்ணமாக
இருக்கிறது.
ஒன்றை எப்போதும்
மறவாதீர்கள். திரைக்கதையில்
எப்போதும்
தடைகள் – சிக்கல்கள் – இருக்க
வேண்டும். ஆகவே,
இந்த இடத்தில்,
லீலாவுக்கும் அஞ்சலிக்குமான மனப்போராட்டத்தை சற்றே
விரிவாகக்கூட நீங்கள் எழுதலாம் .
அது, கதையில்
சுவாரஸ்யத்தைக் கூட்டக்கூடும் .
ஆக, அஞ்சலி தில்லிக்குச்
செல்வது, கதாபாத்திர
உருவாக்கத்தில் ஒரு
முக்கியமான திருப்பம்.
அடுத்து?
தொடரும்…….
கருத்துகள்