திரைக்கதை 03
Chapter 1 – What is a Screenplay? (Contd)
ஆரம்பம் – நடுப்பகுதி – முடிவு =
Setup – confrontation – Resolution .
இந்த மூன்று பகுதிகளே,
திரைக்கதையின் துண்டுகளை ஒன்றிணைத்து, முழுக்கதையாக்கும் பகுதிகள். சரி. ஆனால், ஒரு
கேள்வி வருகிறது அல்லவா?
முதல் பகுதியில் இருந்து
இரண்டாம் பகுதிக்கு எப்படிக்
கதையை நகர்த்துவது?
அதேபோல், இரண்டாம் பகுதியில்
இருந்து மூன்றாம் பகுதிக்குக்
கதை எப்படிச் செல்லும்?
இதற்கு விடை, மிகச்சுலபம்.
Plot Points. சென்ற அத்தியாயத்தில் கொடுக்கப்பட்ட திரைக்கதை
வடிவத்தின் படம் இங்கே
மறுபடியும் கொடுக்கப்படுகிறது.
இதனை இன்னொரு முறை பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்தப் படத்தில், Plot Point 1 மற்றும்
Plot Point 2 என்று இரண்டு
விஷயங்கள் இருப்பதைக்
கவனித்தீர்கள் அல்லவா ?
திரைக்கதையில், கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியாயிற்று.
அடுத்தது என்ன செய்ய வேண்டும்? நடுப்பகுதியை நோக்கிக் கதை
நகர வேண்டும். அதாவது,
பிரதான கதாபாத்திரம் அடைய
நினைக்கும் விஷயத்தின்
பாதையில், தடைகள்
உருவாக்கப்பட வேண்டும்.
இதற்கு உதவுவதுதான்
Plot Point 1. அதாவது,
திரைக்கதையின் முதல் பகுதியில்
இருந்து இரண்டாம் பகுதிக்குக்
கதையை நகர வைக்கும் ஒரு
காரணி. இந்த Plot Point
இல்லாமல் , திரைக்கதை எழுதவே முடியாது.
எப்படி முக்கினாலும், திரைக்கதையின் ஆரம்பத்தில் இருந்து கதை
நகர்வதற்கு, ஏதோ ஒரு காரணி
இல்லாமல் முடியாது.
அதே போல் திரைக்கதையின்
இறுதியை நோக்கிச் செலுத்தும்
காரணியும் அவசியம் தேவை
(Plot Point 2 ). Plot Point என்பதற்கு
சிட் ஃபீல்ட் கொடுக்கும் விளக்கம் –
ஏதோ ஒரு சம்பவம் , கதையின்
போக்கை திசைதிருப்பி, வேறொரு
பக்கம் பயணிக்கச் செய்தால்,
அதுவே Plot Point. இந்த
விளக்கத்தை வைத்து, கதையின்
போக்கை, திரைக்கதையின்
ஆரம்பத்தில் (setup) இருந்து
திசைதிருப்பி, இரண்டாம் பகுதிக்குச் செலுத்துவது Plot Point 1 என்றும், இரண்டாம் பகுதியில் (confrontation) இருந்து திசைதிருப்பி மூன்றாம்
பகுதிக்குச் (resolution) செலுத்துவது,
Plot Point 2 என்றும் புரிந்து
கொள்ளலாம்.
இப்போது, Plot Point என்பதற்கு
சில. உதாரணங்கள் பார்க்கலாம். பெரும்பாலான நண்பர்கள்,
தமிழ்ப்பட உதாரணம்
கேட்டிருப்பதால், அவ்வப்போது
இனி தமிழ்ப்பட உதாரணங்களும்
வரும். ஆரண்ய காண்டம்
படத்தை எடுத்துக்கொள்வோம்.
இந்தப் படம், மிகத்தெளிவாக
எழுதப்பட்ட ஒரு படம்.
படத்தின் முதல் பகுதி – Setup –
இதில், கதாபாத்திர அறிமுகங்கள் (சிங்கப்பெருமாள், அவனது
இளம் மனைவி, சப்பை,
சம்பத், கொடுக்காப்புளி, அவனது
தந்தை ஆகிய கதாபாத்திரங்கள்,
அவர்கள் செய்யும் தொழில், ஒருவருக்கொருவர்
சம்மந்தப்பட்டிருக்கும் விதம்) சொல்லப்பட்டிருக்கும்.
அதேபோல், இரண்டாம்
பகுதி – confrontation – இதில்,
பிரதான கதாபாத்திரமான சம்பத்
தப்பிக்க முயற்சி செய்வது,
அதற்கு ஏற்படும் இன்னல்கள், கொடுக்காப்புளியும் அவனது
தந்தையும் போதை மருந்தை எடுத்துக்கொண்டு தப்பிப்பது,
அவர்களுக்கு ஏற்படும் தடைகள், சிங்கப்பெருமாள் சம்பத்தைக்
கொல்ல முயல்வது,
சப்பையும் சிங்கப்பெருமாளின்
மனைவியும் தப்பிக்க முயலுதல்,
அதற்கு ஏற்படும் தடைகள்
என மிகத்தெளிவாக சொல்லப்பட்டிருக்கும்.
மூன்றாம் பாகம் – resolution –
இந்தக் கதாபாத்திரங்கள் அடைய
நினைத்த விஷயங்கள்
என்னவாயின? என்பதனை
விளக்கும். சிங்கபெருமாள்,
சம்பத்தைக் கொல்லமுடியாமல், இறக்கிறான். சம்பத், தாதாவாக
ஆகிறான். எதிரி தாதா
கும்பலைக் கொல்கிறான்.
கொடுக்காப்புளி, தனது
தந்தையைக் காப்பாற்றுகிறான். சிங்கப்பெருமாளின் மனைவி, தப்பிக்கிறாள். இப்படி, தெளிவான
ஒரு திரைக்கதையாக
இருக்கிறது ஆரண்யகாண்டம்.
இதில், Plot Pointகள் எங்கே
வருகின்றன? முதல் பகுதியில்,
கதாபாத்திர அறிமுகத்துக்குப் பின்னர்,
கதை எங்கே துவங்குகிறது?
கவனியுங்கள். எந்தப் புள்ளி,
முதல் பகுதியையும் இரண்டாம்
பகுதியையும் இணைக்கிறது?
இரண்டு நிகழ்ச்சிகளை எடுத்துக்கொள்ளலாம்.
முதல் நிகழ்ச்சி – ‘நீங்க
என்ன டொக்காயிட்டீங்களா?’
என்று சிங்கப்பெருமாளிடம்
சம்பத் கேட்பது. இரண்டாம்
நிகழ்ச்சி – காரில் சென்று
கொண்டிருக்கும் சம்பத்தின்
அடியாட்களை, சிங்கப்பெருமாள்
ஃபோனில் அழைப்பது.
‘சம்பத்தைக் கொன்றுவிடுங்கள்’
என்று கட்டளையிடுவது. இந்த
இரண்டு நிகழ்ச்சிகளில், எந்தச்
சம்பவம், திரைக்கதையின்
முதல் பாகத்திலிருந்து,
இரண்டாம் பாகத்துக்குக்
கதையை செலுத்துகிறது?
முதல் நிகழ்ச்சி என்று சிலரும்,
இரண்டாம் நிகழ்ச்சி என்று
சிலரும் சொல்லக்கூடும்.
என்னதான் சம்பத் கேட்ட
கேள்வி சிங்கப்பெருமாளைக் கடுப்பாக்கினாலும்,
சிங்கப்பெருமாளின் வெளிப்படையான
மூவ் – சம்பத்தைக்
கொல்வது – எங்கே
தெரியவருகிறது? இரண்டாம்
நிகழ்ச்சியில் தானே?
அதேபோல், ‘டொக்காயிட்டீங்களா’
என்று சம்பத் கேட்கும் கேள்வியால், இரண்டாம் பகுதியான சம்பத் துரத்தப்படுவது ஆரம்பிப்பதில்லை. சம்பத்தைக் கொல்லச்சொல்வதன் மூலமாகவே , சம்பத் ஓடும்
இரண்டாம் பகுதி ஆரம்பிக்கிறது.
ஆகவே, ஆரண்ய காண்டத்தின்
Plot Point 1, சிங்கப்பெருமாள்
சம்பத்தைக் கொல்லச் சொல்வது.
இதில் இருந்துதான், இரண்டாம்
பகுதி தொடங்குகிறது என்பதை
இதற்குள் கவனித்திருப்பீர்கள்.
சரி. Plot Point 2, இந்தப் படத்தில்
எங்கு வருகிறது? மறுபடியும்
ஒருமுறை Plot Point என்பதற்கு விளக்கத்தைப் பார்த்துக்கொள்வோம்.
ஏதோ ஒரு சம்பவம் , கதையின்
போக்கை திசைதிருப்பி, வேறொரு
பக்கம் பயணிக்கச் செய்தால்,
அதுவே Plot Point. இரண்டாம்
பகுதியான துரத்தப்படுதல்
என்பது, எப்போது க்ளைமேக்ஸான மூன்றாம் பகுதியை நோக்கிப் பயணிக்கிறது?
ஒரு மிகச்சிறிய நிகழ்ச்சியின்
மூலம். சம்பத், இன்ஸ்பெக்டரிடம்,
எதிரி தாதா கும்பலிடம் தூது
செல்லச் சொல்லும் காட்சி நினைவிருக்கிறதா?
படத்தில் அவ்வளவாக
முக்கியத்துவம் இல்லாத ஒரு
காட்சியைப் போல் மேலுக்குத் தோன்றினாலும், படத்தின்
முக்கியமான காட்சிகளில்
இதுவும் ஒன்று என்பது,
சற்றே யோசித்துப் பார்த்தால் விளங்கிவிடும். இந்தக்
காட்சி வரும் சூழலைக்
கொஞ்சம் யோசிப்போம்.
அதுவரை, சிங்கப்பெருமாளாலும்,
எதிரி தாதா கும்பலாலும்
துரத்தப்படும் சம்பத், யோசிக்கிறான். தன்னைத் துரத்தும் இந்த
இரண்டு கும்பல்களுக்கும்
சண்டை மூட்டிவிட்டால், தனது
எதிரிகள் காலி. இதன்மூலம், பிழைத்திருப்பது சிங்கப்பெருமாளும்,
வேறு சில சில்லறை
அடியாட்களும் தான்.
ஆகவே, அவர்களை எளிதில்
கொன்று விடலாம். அவர்களில்
சிலர் தன்னுடைய
ஆட்களாகவும் இருந்ததால்,
எளிதில் அவர்களை பயமுறுத்தியும் விடலாம். ஆகவே, இரண்டு
கும்பலுக்கும் சண்டை மூட்டிவிட
என்ன செய்ய வேண்டும்?
எதிரிக்கு எதிரி நண்பன்.
இதுதான் சம்பத் யோசிப்பதன்
சாராம்சம். இந்த யோசனை,
செயல்வடிவம் பெறுவது
எப்போது? இன்ஸ்பெக்டரிடம்
சம்பத் பேசும் சிறிய காட்சியில்.
அந்தக் காட்சிக்குப் பின்னர்தான்
தாதா கும்பலின் ஆள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவதும்,
அவன் கொல்லப்படுவதும்.
அதுதான் எதிரி தாதாவின்
மனதில் சந்தேகத்தை
விளைவிக்கிறது. அதுதான்
இறுதியில் அவர்களை, சம்பத் சொல்லுமிடத்துக்குத் தயங்காமல்
வர வைக்கிறது. அதுதான்
அவர்களின் மரணத்துக்கும் காரணமாகிறது. ஆகவே,
சம்பத் இன்ஸ்பெக்டரிடம்
பேசும் காட்சியே,
ஆரண்ய காண்டத்தின் Plot Point 2 .
இந்த ரீதியில் யோசித்தால்,
எந்தப் படமாக இருந்தாலும்,
பிரதான இரண்டு Plot Point களை மிகச்சுலபமாகக் கண்டுபிடித்து
விடலாம்.
நண்பர்கள், உங்களுக்குப்
பிடித்த படங்களைப் பற்றி
யோசித்துப் பாருங்கள்.
ஆங்கில உதாரணம் ஒன்றைப்
பார்ப்போம்.
Fellowship of the Ring படத்தின்
Plot Point கள் எவை?
Plot Point 1 – ஃப்ரோடோ ,
ஷையரிலிருந்து கிளம்பும் காட்சி.
இதுதான் படத்தின் இரண்டாம்
பகுதியான, ஃப்ரோடோவையும் ஃபெலோஷிப்பையும் சாரோன்
மற்றும் சாருமானின் ஆட்கள்
துரத்தும் பகுதிக்குக் காரணமாவதால்.
Plot Point 2 – லாத்லாரியனில்,
கலாட்ரியேல், மோதிரத்தை
அழிக்காவிடில், மிடில் எர்த்தின்
எதிர்காலம் நாசமாகிவிடும்
என்று ஃப்ரோடோவுக்கு விளக்கும்
காட்சி. இந்தக் காட்சிதான்,
மோதிரத்தை அழிக்கும்
முயற்சியில் ஃப்ரோடோவை
மிகத்தீவிரமாக ஏவிவிடுகிறது
என்பதால். Plot Point களைப்
பற்றிய முக்கியமான விஷயம் என்னவென்றால், அவை,
பரபரப்பான ஒரு காட்சியாகத்தான்
இருக்க வேண்டும் என்று
அவசியமில்லை. மிகச்சிறிய
ஒரு ஷாட்டாகக்கூட இருக்கலாம்.
ஆனால், கதையை, ஒரு
பகுதியிலிருந்து சரெக்கென்று
அடுத்த பகுதியை நோக்கி அது
திருப்ப வேண்டும். அதுவே ஒரே
ரூல். இது, சிட் ஃபீல்டின் கூற்று.
இப்போது ஒரு கேள்வி.
திரைக்கதை, தெளிவாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு,
ப்ளாட் பாயின்ட்கள் சரியாக அமைந்திருந்தால், அந்தப்
படம் சுவாரஸ்யமாகி விடுமா?
பதில் – கட்டாயம் இல்லை. ஒரு
திரைக்கதை சுவாரஸ்யமாக
இருக்க வேண்டும் என்றால்,
கதை உறுதியாக இருக்க
வேண்டும். கதையே
இல்லாமல், திரைக்கதையை
மட்டும் டெக்னிகலாகப் பிரித்தால்,
அந்தப் படம் மொக்கை தான்.
ஒரு உதாரணமாக,
மணிரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’
படத்தை அலசுவோம்.
Amores Perros. படத்தின் காப்பி
என்னும் பாயிண்ட்டை
விட்டுவிடுவோம்.
ஒரு தமிழ்ப்படமாக,
ஆய்த எழுத்து படத்தின்
குறைபாடு என்ன?
ஏன் அந்தப் படம் ஓடாமல்
போனது? காரணம் மிக
எளிது. என்னதான்
திரைக்கதையின் விதிகள்
தீவிரமாகப் பின்பற்றப்பட்டிருந்தாலும்,
படம் ஓடாமல் போனதற்குக்
காரணம், நடைமுறை வாழ்வில் சாத்தியமில்லாத. விஷயங்கள், திரைக்கதை முழுதும்
அள்ளித் தெளிக்கப்பட்டிருந்ததே
காரணம். மாதவனின் கதாபாத்திரம்
ஒரு உதாரணம். முன்னுக்குப்பின்
முரணாக, தன் அண்ணனைக் கொலைசெய்த அதே
அரசியல்வாதியிடம் சரண்டர் ஆகி,
அவனது கைப்பாவையாக
மாறிவிடுகிறது இந்தக்
கதாபாத்திரம். இதற்கு என்ன
காரணம் என்று பார்த்தால்,
பவர் வேண்டும் என்று தேய்ந்து
போன காரணம் ஒன்றை
சொல்கிறது.
அதேபோல், மாபெரும்
அரசியல்வாதியுடன் பொருதி,
அந்த அரசியல்வாதியை
மண்ணைக்கவ்வச் செய்யும்
கதாநாயகன் யார் என்று பார்த்தால்,
ஒரு மாணவன். அடப்பாவிகளா. தமிழகத்தில் அப்படியா இருக்கிறது?
ஒரு பேச்சுக்கு, மந்திரி ஒருவரை,
ஒரு மாணவன் எதிர்ப்பதாக வைத்துக்கொள்ளலாம். அடுத்த
நொடியே, குடும்பத்தோடு அழிக்கப்பட்டுவிடமாட்டானா அவன்?
இந்தப் படத்தில் வருவது
போன்ற நிகழ்ச்சிகள்,
மணிரத்னத்தின் கனவுகளில்
மட்டுமே சாத்தியம். கூடவே,
சாரமே இல்லாத காதல் கதை
வேறு (த்ரிஷா -சித்தார்த்),
படத்தையே ஜவ்வு போல்
இழுக்கிறது.
ஆக, திரைக்கதை
சரியாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டால்
மட்டும், படம் ஓடிவிடாது என்பதற்கு
ஆய்த எழுத்து ஒரு உதாரணம்.
இன்னொரு உதாரணம்,
ஹே ராம். கமல், திரையுலகின்
டெக்னிகல் விதிகள் அனைத்தையும்
கற்றுத் தேர்ந்த பண்டிதர்
என்பது அனைவருக்குமே
தெரியும். இருந்தாலும்,
ஏன் ஹே ராம் தோல்வியுற்றது?
(ஹே ராம் மட்டுமல்லாது,
கமல் திரைக்குப்பின் பங்கேற்கும்
படங்கள் பெரும்பாலும்
தோல்வியுறுவது ஏன்?)
மணிரத்னத்துக்குச் சொன்ன
அதே காரணங்கள், கமலுக்கும்
பொருந்தும். ஒரே சீரான
திரைக்கதை என்பது கமல்
எழுதும் படங்களில்
இருப்பதில்லை. திரைக்கதையின் கட்டமைப்பு – அதாவது, மூன்று
பகுதிகள், இரண்டு ப்ளாட்
பாயிண்ட்கள் என்பதெல்லாம்
கச்சிதமாகக் கமல்
எழுதியிருந்தாலும் (ராணி
முகர்ஜியின் மரணம் – முதல்
ப்ளாட் பாயின்ட். ஷா ருக் கானின் கதாபாத்திரம் இறப்பது,
இரண்டாவது ப்ளாட் பாயின்ட்),
கதை – அதில் கோட்டை
விட்டுவிடுகிறார். அதுதான்
காரணம். ஹே ராமில், உலகத்தரம்
என்று எண்ணி அவர் வைத்த பல
காட்சிகள் – சிம்ஃபனி போன்ற
இசை பின்னணியில் ஒலிக்க,
உடலுறவு கொள்வது, முஸ்லிம்களை
மட்டும் தொடர்ந்து வில்லன்களாக சித்தரிப்பது, அவர் சார்ந்திருக்கும் சமூகத்தின் அங்கத்தினர்களையே தொடர்ந்து படங்களில்
காண்பிப்பது, தானுமே
அச்சமூகத்தைச் சேர்ந்தவனாகவே
நடிப்பது போன்ற பல காரணங்கள்
உண்டு. டெக்னிகல் விஷயங்கள் சிறந்திருந்தால் மட்டுமே படம்
ஓடிவிடாது என்பதற்கு, கமலும் மணிரத்னமுமே இரண்டு சிறந்த உதாரணங்கள்.
திரைக்கதை எழுதுவதன்
கோல்டன் ரூல் என்னவெனில்,
நடைமுறை வாழ்க்கைக்கு
ஒவ்வாத – சமூக வாழ்வுக்கு
அந்நியமாக இருக்கும் படங்கள்,
பார்க்கும் ஆடியன்ஸின்
மனதில் இனம்புரியாத வெறுப்பை ஏற்படுத்திவிடுகின்றன. அந்த
வெறுப்பு அவர்களுக்கே
தெரியாமல் உருவாகி, படத்தைப்
பற்றிய நெகட்டிவ் கருத்தைக்
கிளப்பிவிட்டு, அதனால் படம்
ஓடாமல் போகிறது. இதற்கு
எதிர்வெட்டாக, ‘தெய்வத்திருமகள்’
போன்ற அழுவாச்சி காவியங்கள்
ஓடவும் செய்கின்றன. இத்துடன்,
இந்த முதல் அத்தியாயம் –
திரைக்கதை என்றால் என்ன? – முடிவடைகிறது. இந்த
அத்தியாயத்தில் நாம் பார்த்த
விஷயங்கள் என்னென்ன?
திரைக்கதை என்றால் என்ன
என்று பார்த்தோம். திரைக்கதையின்
மூன்று பகுதிகளைப் பற்றிப்
பார்த்தோம்.
Plot Point பற்றித் தெரிந்து
கொண்டோம். என்னதான்
இவையெல்லாம் இருந்தாலும்,
கதை உறுதியாக இருக்கவேண்டும்;
அது, சம்மந்தமில்லாத
விஷயங்களைப் பற்றிப்
பேசக்கூடாது என்பதையும் புரிந்துகொண்டோம். இப்போது,
ஒரு சிறிய கோரிக்கை.
இந்தத் தொடரைப் படித்துவரும்
நண்பர்கள், தங்களுக்குப்
பிடித்தமான படங்கள்
என்னென்னவோ, அவைகளிலெல்லாம் இந்த விஷயங்கள் இருக்கின்றனவா
என்று யோசித்துப் பார்க்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.
மட்டுமல்லாது, இனி நீங்கள்
பார்க்க நேரும் எந்தப் படமாக
இருந்தாலும் சரி, கதை
மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதா?
ப்ளாட் பாயிண்ட்கள் இருக்கின்றனவா? என்று கவனித்து வாருங்கள்.
ஒரு சில படங்களிலேயே,
இந்தக் கலை உங்களுக்குக் கைவரப்பெற்றுவிடும். அதன்பின், திரைப்படங்களை வெகு சுலபமாக அலசிவிடலாம். திரைக்கதையின் அடிப்படையைப் பற்றிப் பார்த்தாயிற்று.
அடுத்து? தொடரும்…
கருத்துகள்